நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடந்து வரும் நிலையில் டெல்லியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ கட்சிகள் கூட்டணி அமைக்க புதிய வாய்ப்பு ஒன்று உருவாகியுள்ளது. ஏற்கனவே டெல்லியில் இவ்விரு கட்சிகளும் கூட்டணி குறித்து பலகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டது. ஆனால் இறுதி வரை முடிவு எட்டப்படாத நிலையில் இரு கட்சிகளும் தனித்தனியே வேட்பாளர்களை அறிவித்தது.
இந்நிலையில் இரண்டு கட்சிகளும் சேர்ந்திருந்தால் பாஜக விற்கு எதிராக பலமான கூட்டணி உருவாகியிருக்கும் என அவ்விரு கட்சி தொண்டர்களும் தொடர்ந்து கூறிவந்தனர். இந்நிலையில் நேற்று ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த அரவிந்த் கெஜ்ரிவால், "இப்போதும் காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணிக்கு தயாராகவே இருக்கிறோம். இந்திய தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை காவல்துறை உள்ளிட்ட முக்கிய துறைகள் மத்திய அரசின் கைவசம் உள்ளது. இதன் மூலம் டெல்லி அரசை மத்திய அரசு கட்டுப்படுத்தவே முயற்சிக்கிறது. இதனால் தான் டெல்லிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இது ஆம் ஆத்மீ கட்சியின் தேர்தல் அறிக்கையில் கூட இருக்கிறது. எனவே காங்கிரஸ் கட்சி டெல்லியை தனி மாநிலமாக அறிவிப்போம் என வாக்குறுதி அளித்தால், அந்த கட்சிக்கு ஆதரவளிக்க தயாராக இருக்கிறோம்" என தெரிவித்தார். இதன் மூலம் இவ்விரு கட்சிகளும் மீண்டும் இணைய வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பேசிக்கொள்ளப்படுகிறது.