Skip to main content

“மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது..” - அமைச்சர் அமித்ஷா 

Published on 14/09/2023 | Edited on 14/09/2023

 

“Hindi unites the diversity of languages..” - Minister Amit Shah

 

இன்று செப். 14ம் தேதி இந்தி தினம் எனப்படும் இந்தி திவாஸ் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்தி தினத்தை முன்னிட்டு ஒரு காணொளியை வெளியிட்டுள்ளார். அதில் ஒன்றிய அமைச்சர் அமித்ஷா, “இந்தி திவாஸ் தினத்திற்கு எனது வாழ்த்துகள். இந்தியா பல ஆண்டுகளாக பல்வேறு மொழிகளின் நாடாக இருந்து வருகிறது. இந்தி எப்போதும் ஜனநாயக மொழியாக இருந்துவருகிறது. இது இந்திய விடுதலை போராட்டத்தின் போது மக்களை ஒருங்கிணைத்தது. 

 

உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் மொழிகளின் பன்முகத்தன்மையை இந்தி ஒருங்கிணைக்கிறது. இந்தி எப்போதும் எந்த மொழியுடனும் போட்டியிட்டதில்லை. போட்டியும் போடாது. அனைத்து மொழிகளையும் வலுப்படுத்தியே ஒரு நாடு வலுவாகும். இந்தி பல்வேறு இந்திய மொழிகள், பேச்சுவழக்குகள் மற்றும் பல உலகளாவிய மொழிகளுக்கு மதிப்பளித்து, அவற்றின் சொற்களஞ்சியம், வாக்கியங்கள் மற்றும் இலக்கண விதிகளை ஏற்றுக்கொண்டது.

 

விடுதலைப் போராட்டத்தின் போதும், விடுதலைக்குப் பிறகும் இந்தியின் முக்கிய பங்கை கருத்தில் கொண்டு சட்டத்தை வடிவமைத்தவர்கள் செப். 14, 1949 அன்று இந்தியை அலுவல் மொழியாக ஏற்றுக்கொண்டனர். ஒரு நாட்டின் அசல் மற்றும் ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு அதன் சொந்த மொழி மூலம் மட்டுமே சாத்தியமாகும். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில் தேசிய மற்றும் உலகளாவிய மன்றங்களில் இந்திய மொழிகளுக்கு உரிய அங்கீகாரமும் மரியாதையும் கிடைத்துள்ளன. 

 

அலுவல் பணிகளுக்கு இந்தியை உபயோகப்படுத்த வேண்டும். நாட்டின் அலுவல் மொழியில் செய்யப்படும் பணிகளை அவ்வப்போது மதிப்பாய்வு செய்வதற்காக அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் உள்ள அரசுப் பணிகளில் இந்தி மொழிப் பயன்பாட்டில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஆய்வு செய்து அதன் அறிக்கையை தயாரித்து குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும் பொறுப்பு அதற்கு வழங்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் சபையில் இந்தி பயன்பாட்டை ஊக்குவிக்க இந்தியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்