உலக அளவில் மென்பொருள் துறையில் காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூஷன்ஸ் (COGNIZANT TECHNOLOGY SOLUTION- CTS) "சிடிஎஸ்" நிறுவனம் முன்னணியில் வகிக்கிறது. இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனம் அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. அதே போல் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட நாடுகளில் தனது நிறுவனத்தை நிறுத்தி சிறப்பாக நடத்தி வருகிறது. இந்நிலையில் சி.டி.எஸ் நிறுவனம் செலுத்த வேண்டிய ரூபாய் 2,912 கோடியை கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியது.
வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸை எதிர்த்து சி.டி.எஸ் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வருமான வரித்துறை நோட்டீஸ் எதிர்த்து மேல் முறையீடு செய்ய வருமான வரித் துறையிலேயே பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றை விட்டு விட்டு நேரடியாக உயர்நீதிமன்றத்தை அணுகியுள்ளதாக கூறி சி.டி.எஸ் (CTS) மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி கல்யாணசுந்தரம் உத்தரவிட்டார். சி.டி.எஸ் நிறுவனம் அமெரிக்கா மற்றும் மொரீசியஸ் நாடுகளில் வசிக்கும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு விற்பனை செய்திருந்த 94 லட்சம் பங்குகளை கடந்த 2016 ஆம் ஆண்டு மே மாதம் மீண்டும் வாங்கியது.
இதற்காக 19,415 கோடி ரூபாயை வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு திருப்பிச் செலுத்தியது. இந்தத் தொகைக்கு 15 சதவீதம் வரியாக ரூபாய் 2,912 கோடியை செலுத்த வேண்டும் என வருமானவரித்துறை சிடிஎஸ் நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பியது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நோட்டீசை ரத்து செய்ய கோரி சி.டி.எஸ் (CTS) நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி கல்யாணசுந்தரம் சிடிஎஸ் நிறுவனத்தின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார். இதன் காரணமாக வருமான வரித்துறைக்கு செலுத்த வேண்டிய ரூபாய் 2,912 கோடியை செலுத்த வேண்டிய கட்டாயத்தில் டி.சி.எஸ் நிறுவனம் உள்ளது.