சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டின் அருகே இருசக்கர வாகனங்களில் 6 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளது. இந்த கும்பல் ஆம்ஸ்ட்ராங்கை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்பியோடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் தப்பியோடிய மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.
அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். கொலையாளிகளை விரைந்து பிடிக்க வேண்டும் என வலியுறுத்தி சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 200க்கும் மேற்பட்டோர் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. மேலும் அவரது உடல் வைக்கப்பட்டுள்ள சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு வெளியே அக்கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கிடையே 5 தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடும் பணி தீவிரமடைந்துள்ளது.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட இடத்தில் இருந்து நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களைப் போல் உடை அணிந்து கொண்டு வந்த மர்ம நபர்கள் ஆம்ஸ்ட்ராங்கை வெட்டியதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து பகுஜன் சமாஜ் கட்சியின் தேசியத் தலைவர் மாயாவதி தனது எக்ஸ் சமூக வலைத்தளப்பதிவில், “தமிழ்நாடு மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் (பி.எஸ்.பி) தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், அவரது வீட்டிற்கு வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில் ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.