இந்தியாவில் கரோனா பாதிப்பு மோசமடைந்துள்ளது. தினசரி மூன்று லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மேலும், இந்தியாவில் கரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லட்சத்தைக் கடந்துள்ளது.
இந்தநிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும், பொருளாதார நிபுணருமான பரகல பிரபாகர், கரோனா பாதிப்பு தொடர்பாக மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளார். கரோனா இரண்டாவது அலை காரணமாக நிகழ்ந்து வரும் மோசமான பாதிப்பின் மீது, மத்திய அரசு உணர்ச்சியற்றதாகவும், இரக்கமற்றதாகவும் இருக்கிறது என கூறியுள்ள அவர் "பிரதமரின் புகழ் மற்றும் தகவல் தொடர்பு திறன் ஆகியவை இந்த அரசாங்கத்தின் திறமையின்மை மற்றும் இதயமற்றத் தன்மையை ஈடுசெய்கிறது. உணர்ச்சியற்ற தன்மையால் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் கோபத்தை அவர்களால் தணிக்க முடியும். ஆனால் புகழ் மற்றும் அரசியல் மூலதனம் ஆகியவை எந்தவித அறிவிப்பும் தராமல் வெளியேறும் பழக்கம் கொண்டவை. உணர்வற்ற தன்மை என்றென்றும் நிலைத்திருக்காது. இரக்கம், வெளிப்படைத்தன்மை, பச்சாதாபம் நீடிக்கும்" என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், "இறப்புகள் குறைத்து பதிவு செய்யப்படுகின்றன. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவு செய்யப்பட்டுள்ளன. நிலைமை மோசமாக உள்ளது என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மருத்துவமனைக்கு வெளியே ஆம்புலன்சில் நோயாளிகள் காத்திருப்பது, ஏராளமான உடல்கள் எரிக்கப்படுவது, மருத்துவமனைகளில் ஸ்ரெட்ச்சர் மற்றும் படுக்கைகள் அதிகரிப்பது, அங்கு உறவினர்கள் கூக்குரலிடுவது தொடர்பான காட்சிகள் சமூகவலைதளங்களில் நிரம்பி வழிகின்றன” என கூறியுள்ளார்.
"அரசியல் தலைவர்களைப் பொறுத்தவரை, தேர்தல்கள் முக்கியம். மதத் தலைவர்களைப் பொறுத்தவரை, மத அடையாளத்தின் மறுமலர்ச்சி முக்கியம். பொது சுகாதாரம் அல்லது மக்களின் வாழ்க்கை மீதான அவர்களின் முக்கியத்துவம் மிகவும் குறைவு. நமது தொலைக்காட்சிகள், மக்கள் பேரணிகளுக்காக அணிதிரட்டப்படுவதைக் காட்டுகின்றன. சேதம் ஏற்பட்டபின், மதத் தலைவர்கள் கும்பமேளா இனிமேல் அடையாள விழாவாக நடக்கும் என கூறினர். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேரணிகளை ரத்து செய்வதாக அறிவித்தார். திரிணாமூல் மற்றும் பாஜக ஆகியவை கரோனா தடுப்பு நெறிமுறைகளை அப்பட்டமாக மீறி பேரணிகளைத் தொடர்கின்றன" எனவும் பரகல பிரபாகர் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், "இதைக் கேட்கவே அருவருப்பாக இருக்கிறது. அவர்கள் நம் நோய்த்தொற்று விகிதம் குறைவாக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்கள் இதயமற்ற வகையில் நாடுகளுக்கு இடையேயான ஒப்பீடுகளையும், தேர்தெடுக்கப்பட்ட விஷயங்களை மட்டும் ஒப்பிடுகிறார்கள். நாடுகளிடையேயான ஒப்பீடுகள் கூட குறைபாடுகள் உள்ளவை. நமது தொற்று பாதிப்பு விகிதம், பூட்டான், நேபாளம், பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகியவற்றைவிட அதிகம். இது நாம் யோசிக்க வேண்டிய விஷயம்" எனவும் கூறியுள்ளார்.