கரோனாவுக்கு எதிரான போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் முக்கியமானவை என சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,32,681 ஆக உயர்ந்துள்ளது. இதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,12,998 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64.53 லட்சத்திலிருந்து 65.24 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா பாதித்த 7.95 லட்சம் பேருக்கு மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் குளிர்கால மாதங்கள், பண்டிகை காலத்தில் கரோனா வைரஸ் வேகமாகப் பரவுவதற்கான சாத்தியங்கள் இருப்பதாக மருத்துவ வல்லுநர்கள் எச்சரித்துள்ள சூழலில், இதுகுறித்து பேசியுள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன், "கரோனா வைரஸுக்கு எதிராக 3 தடுப்பு மருந்துகள் தயாராகி வருகின்றன. இதில் ஒரு மருந்து கிளினிக்கல் பரிசோதனையில் 3-வது கட்டத்தில் இருக்கிறது. மற்ற இரு தடுப்பு மருந்துகளும் 2-வது கட்டத்தில் இருக்கின்றன. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கரோனா வைரஸ் தடுப்பு மருந்து விரைவில் மக்களுக்குக் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
கரோனாவுக்கு எதிராக நாம் நடத்திவரும் போரில் அடுத்த இரண்டரை மாதங்கள் மிகவும் முக்கியமானவை. ஏனென்றால், குளிர்காலத்தில் கரோனா பரவும் வேகம் அதிகரிக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பண்டிகை காலத்தில் மக்கள் நெருக்கமாகக் கூடும் வாய்ப்பு இருக்கும். அப்போதும் கரோனா பரவல் அதிகரிக்கலாம். ஆதலால், ஒவ்வொரு குடிமகனும் கரோனா விதிமுறைகளைத் தீவிரமாகப் பின்பற்றி, சமூக விலகலைக் கடைப்பிடித்து கரோனா பரவாமல் தடுக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.