நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22 ஆம் தேதி (22.07.2024) தொடங்கியது. இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை மொத்தம் 19 அமர்வுகளுடன் நடைபெறவுள்ளது. இதன் ஒரு பகுதியாக 2024-25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஜூலை 23 ஆம் தேதி (23.07.2024) தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார். அதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி இருந்தன. அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் வெங்காயம், உருளைக்கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையேற்றத்தைக் கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் அடையாளமாக, எம்.பி.க்கள் வெங்காயத்தால் செய்யப்பட்ட மாலைகளைக் கழுத்தில் அணிந்து நூதன முறையில் போராட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது, வெங்காயத்தின் விலையைக் குறைக்க வேண்டும் எனவும் முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக சார்பில் தமிழச்சி தங்க பாண்டியன், விசிக தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக சிவசேனா (யூ.பி.டி.) எம்.பி. பிரியங்கா சதுர்வேதி கூறுகையில், “விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதாக உறுதியளித்த அரசாங்கம் குறைந்தபட்சம் குறைந்த பட்ச ஆதரவு விலையையாவது வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோருகின்றனர். மகாராஷ்டிராவில் வெங்காய விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படவில்லை. அதே நேரத்தில் குஜராத்தில் வெங்காய விவசாயிகள் விளைபொருட்களை ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். இதற்கும் எதிர்ப்புத் தெரிவிக்கிறோம்” எனத் தெரிவித்தார்.