ஆள்நடமாட்டம் இல்லாத சாலையில் தனியாக சென்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் காவலர் ஒருவர் அத்துமீறும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப்பிரதேச மாநிலத் தலைநகர் போபாலுக்கு அருகே உள்ளது ஹனுமன்கஞ்ச் கிராமம். இந்தப் பகுதியில் கடந்த 7ஆம் தேதி இரவு 11 மணியளவில் காவலர் ஒருவர் தனது பைக்கில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அந்த நேரத்தில், அல்பனா டாக்கீஸ் பகுதிக்கு அருகே ஒரு இளம்பெண் தனியாக சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த பெண்ணை நோட்டமிட்ட காவலர் தனது பைக்கை திருப்பிக்கொண்டு நேராக அந்த பெண்ணிடம் சென்றுள்ளார்.
அதைத் தொடர்ந்து, இரவு நேரத்தில் தனியாக சென்று கொண்டிருந்த பெண்ணை வழிமறித்த காவலர், அந்த பெண்ணிடம் பொறுமையாகப் பேச்சு கொடுத்துள்ளார். அந்த சமயம், அப்பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாததால் அந்த பெண்ணை பாலியல் சீண்டலுக்கு உள்ளாக்கியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளம்பெண், என்ன செய்வது எனத் தெரியாமல் திகைத்த நிலையில், அந்த காவலரிடம் இருந்து தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால், தன் பிடியை விடாத அந்த காவலர், அந்த பெண்ணின் கைகளை இறுக்கி பிடித்தபடி மிருகத்தனமாக நடந்துகொண்டுள்ளார். ஒரு கட்டத்தில் அந்த காவலர் பிடியில் இருந்து நழுவிய இளம்பெண் உடனே அங்கிருந்து ஓட்டம் பிடிக்கிறார்.
ஆனால், அதன்பிறகும் விடாத காவலர் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அந்த பெண்ணை பின்தொடர்ந்து செல்கிறார். இதையடுத்து, அங்கிருந்த நபர் ஒருவர், இந்த அதிர்ச்சி சம்பவத்தை தனது செல்போனில் வீடியோ எடுத்து சோசியல் மீடியாவில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது. இதைப் பார்த்த மாநில மகளிர் ஆணைய உறுப்பினரும் காங்கிரஸ் தலைவருமான சங்கீதா சர்மா, "பெண்களுக்கு ஆபத்தான இடமாக இந்தியா மாறி வருகிறது. போபால் போலீசாரின் இச்செயல் உண்மையிலேயே வெட்கக்கேடானது" எனத் தெரிவித்துள்ளார்.
- சிவாஜி