அரபிக் கடலில் உருவான புயலுக்கு 'மகா' என பெயரிடப்பட்டுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. லட்சத்தீவு பகுதியில் நிலை கொண்டுள்ள 'மகா' புயல் நாளை அதிதீவிர புயலாக மாறும் எனவும் கூறியுள்ளது. கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து 320 கி.மீ. மேற்கு, வடமேற்கு திசையில் மகா புயல் நிலைகொண்டுள்ளது. அதேபோல் லட்சத்தீவு பகுதியில் இருந்து 25 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசை நோக்கி 'மகா' புயல் நகர்ந்து வருகிறது. ஏற்கனவே அரபிக்கடலில் கியார் புயல் உள்ள நிலையில் இரண்டாவதாக மகா புயல் உருவாகியுள்ளது. மகா புயலால் காற்றின் வேகம் 95 கிலோ மீட்டரில் இருந்து 110 மீட்டராக இருக்கும்.
கேரளா மற்றும் கர்நாடகா கடற்பகுதிகளில் மீனவர்கள் நாளை மீன்பிடிக்க வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகம் மற்றும் புதுவையில் 20 மாவட்டங்களில் 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மதுரை, நெல்லை, குமரி, ராமநாதபுரம், விருதுநகர், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை, தேனி, கோவை, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு.
கனமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் குன்னுர், கோத்தகிரி, உள்ளிட்ட நான்கு தாலுக்காக்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை என்று ஆட்சியர் அறிவித்துள்ளார். அதேபோல் புதுவை மற்றும் காரைக்காலில் உள்ள தனியார் பள்ளிகள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு மட்டும் நாளை (31/10/2019) என அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.