கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி ஆளுநர் மாளிகையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமையில் சிக்கிம் மாநில உதய தினம் கொண்டாடப்பட்டது. இதில் புதுச்சேரியில் கல்வி பயிலும் சிக்கிம் மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், “விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் 40க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். விஷ சாராயம் குடித்து உயிரிழந்த சம்பவம் ஒரு கரும்புள்ளி. கள்ளச்சாராய விற்பனையை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். புதுச்சேரியில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எந்த பகுதியில் இருந்து கள்ளச்சாராயம் வந்தாலும் அதனைக் கட்டுப்படுத்த வேண்டும்" என்றார்.