கரோனா வைரஸ் பரவலை மத்திய அரசு பேரிடராக அறிவித்துள்ளது.

சீனாவின் வுஹானில் தொடங்கி தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 5,080 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ள இந்த கரோனா வைரசால் 1,37,702 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ள இந்த வைரஸ் இதுவரை 85 பேரைப் பாதித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை இரண்டு பேர் கரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் கரோனா பரவுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், இதனை ஒரு பேரிடராக அறிவித்துள்ளது மத்திய அரசு.
இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில், "மாநில பேரிடர் மீட்பு நிதியத்தின் கீழ் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கும் நோக்கத்திற்காக கோவிட் 19 வைரசைப் பேரிடராகக் கருத அரசாங்கம் முடிவு செய்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும், கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மருத்துவச் செலவுகளை மாநில அரசே நிர்ணயிக்கும் எனவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.