2021- 2022 ஆம் நிதி ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து உரையாற்றிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "ரயில்வே மேம்பாட்டு பணிகளுக்கு ரூபாய் 1.10 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பொது போக்குவரத்து பேருந்து வசதிகளை மேம்படுத்த ரூபாய் 18,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூபாய் 1.5 லட்சத்தில் இருந்து ரூபாய் 3 லட்சமாக உயர்த்தப்பட்ட வீட்டுக்கடன் வட்டிச் சலுகை மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. குறைந்தவிலை வீடுகளைக் கட்டும் திட்டங்களுக்கு 2022 வரை வரிச்சலுகை. மறைமுக வரிகளில் வழங்கப்பட்டு வரும் 400 விதமான பழைய விலக்குகள் மறுபரிசீலனை செய்யப்படும்.
வருமான வரி ஏய்ப்பவர்களை விரைவாகவும், எளிதாகவும் கண்டறிய நவீன தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். பெரிய அளவில் வரி ஏய்ப்பு கண்டுபிடித்தால் மட்டுமே 10 வருட பழைய வருமான வரி கணக்கு ஆய்வு செய்யப்படும். மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு பழைய வருமான வரி கணக்குகள் மீண்டும் ஆய்வு செய்யப்படாது. தங்கத்துக்கான இறக்குமதி 12.5% லிருந்து மீண்டும் 10% ஆக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக ஜிஎஸ்டி வசூலில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது" என்றார்.
நாடாளுமன்றத்தில் இன்று (01/02/2021) காலை 11.00 மணிக்கு பட்ஜெட் உரையைத் தொடங்கிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மதியம் 12.50 மணிக்கு வாசித்து முடித்தார். பட்ஜெட் தாக்கல் உரையை 1 மணி நேரம் 50 நிமிடங்கள் அமைச்சர் வாசித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் உரையில் தனிநபர் வருமான வரி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூபாய் 2.50 லட்சமாக தொடருகிறது.