


நாடு முழுவதும் இளநிலை மருத்துவப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு தொடங்கி நடைபெற்று முடிந்தது. பிற்பகல் 02.00 மணிக்கு தொடங்கிய நீட் நுழைவுத் தேர்வு மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.
நாடு முழுவதும் உள்ள 3,842 தேர்வு மையங்களில் சுமார் 15.97 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். குறிப்பாக தமிழகத்தில் சென்னை, சேலம் உள்பட 14 இடங்களில் 238 மையங்களில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். புதுச்சேரி மாநிலத்தில் 15 தேர்வு மையங்களில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வை எழுதினர்.
ஹால் டிக்கெட், அடையாள அட்டை, வெளிப்படைத் தன்மையுடன் கூடிய குடிநீர் பாட்டில் மட்டுமே தேர்வறையில் கொண்டு செல்ல மாணவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. அதேபோல் மாணவர்களின் ஆதார் எண் உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்த பின்னரே தேர்வெழுத மாணவர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற்று முடிந்தது.
நீட் தேர்வு எளிதாக இருந்ததாக சென்னையில் தேர்வு எழுதிய மாணவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நீட் தேர்வில் உயிரியல் பாடப்பிரிவு தொடர்பான கேள்விகள் எளிமையாக இருந்ததாகவும், இயற்பியல் பாடப்பிரிவில் நாங்கள் எதிர்பார்த்த கேள்விகள் கேட்கப்படவில்லை என்று மாணவிகள் குறிப்பிட்டுள்ளனர்.