பள்ளி ஆசிரியரை கடத்திச் சென்று வலுக்கட்டாயமாக திருமணம் நடத்தி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பீகார் மாநிலம் பெகுசராய் மாவட்டத்தைச் சேந்தவர் அவ்னிஷ் குமார். இவர், பீகார் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி கதிஹார் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் ஆசிரியராக வேலை செய்து வருகிறார். இவரும், லக்கிசராய் மாவட்டத்தைச் சேர்ந்த குஞ்சன் என்ற பெண்ணும் நான்கு வருடங்களாக காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது.
அவ்னிஷ் அரசு ஆசிரியரான பிறகு, குஞ்சன் தனது குடும்பத்தினரோடு சென்று திருமணம் செய்யுமாறு வற்புறுத்தியுள்ளார். ஆனால், அதற்கு அவ்னிஷ் மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து அந்த பெண்ணின் உறவினர்கள், அவ்னிஷ் வேலைக்கு செல்லும்போது அடித்து துப்பாக்கியை காட்டி, அவரை கடத்திச் சென்றுள்ளனர். அதன் பிறகு, கோயிலில் அந்த பெண்ணுக்கு அவ்னிஷை வலுக்கட்டாயமாக திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. இதையடுத்து, அந்த பெண்ணை, அவ்னிஷ் வீட்டுக்கு உறவினர்கள் அனுப்பி வைத்துள்ளனர். அதன் பின்னர் அங்கிருந்த தப்பித்த அவ்னிஷ், தான் அந்த பெண்ணை காதலிக்கவில்லை என்றும், தன்னை தொடர்ந்து திருமணம் செய்ய சொல்லி துன்புறுத்தி வந்ததாகவும், குஞ்சனின் உறவினர்கள் தன்னை அடித்து கட்டாய திருமணம் செய்து வைத்ததாகவும் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.