நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்த ரூபாய் 20 லட்சம் கோடிக்கான சிறப்புத் திட்டங்களை முதற்கட்டமாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று (13/05/2020) அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பில் சிறு, குறு தொழிற்துறையினர்களுக்கு கடனுதவி, வருமான வரிக்கணக்கைத் தாக்கல் செய்ய அவகாசம் நீட்டிப்பு, தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் உள்ளிட்ட அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தன.
இது குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் தனது ட்விட்டர் பக்கத்தில், "ஏழை இருந்தால் என்ன, மடிந்தால் என்ன என நினைக்கும் அரசுதான் நம்மை ஆள்கிறது. மக்கள் தொகையில் கீழ்ப்பாதியில் உள்ள 13 கோடி குடும்பங்களுக்கு தலா ரூபாய் 5 ஆயிரம் தரச் சொல்கிறோம். ஏழை, புலம்பெயர்ந்து வீடு திரும்பிய தொழிலாளர்களுக்கு ஒரு ரூபாய் கூட தர மத்திய அரசு மறுக்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.