மேற்கு வங்க மாநிலத்தில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அம்மாநிலத்தில் உள்ள சந்தேஷ்காலி கிராமத்தில் பட்டியலினப் பெண்களுக்கு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகரான ஷேக் ஷாஜகான் பாலியல் தொல்லை கொடுத்துள்ளதாகக் கூறப்பட்டது. மேலும் அவர்களின் நிலத்தை அபகரித்துள்ளதாகவும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனிடையே, கடந்த ஜனவரி மாதம் ரேஷன் பொருட்கள் ஊழல் தொடர்பாக ஷாஜகான் ஷேக் வீட்டில் சோதனை நடத்த அமலாக்கத்துறை அதிகாரிகள் சென்றனர். அதிகாரிகளை ஷேக் ஷாஜகான் ஆதரவாளர்கள் கடுமையாகத் தாக்கினர். இதனைத் தொடர்ந்து அதிகாரிகளிடம் தப்பிய ஷேக் ஷாஜகான் தலைமறைவாக இருந்தார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சந்தேஷ்காலி கிராமத்துப் பெண்கள், ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீசில் புகார் அளித்தும், அதற்கு போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்கள் போராட்டம் நடத்தி வந்தனர். ஷேக் ஷாஜகானின் கூட்டாளிக்குச் சொந்தமான கோழிப் பண்ணைகளைப் போராட்டக்காரர்கள் தீ வைத்துக் கொளுத்தினர். ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராட்டம் நடந்து வந்ததால், அப்பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வந்ததது. இதனால் அங்கு 144 தடை உத்தரவு போடப்பட்டது. பெண்களின் இந்தப் போராட்டம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. மேலும், இந்தச் சம்பவத்திற்கு பா.ஜ.கவினர் கடும் கண்டனம் தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, தேசிய மகளிர் ஆணையக் குழு சந்தேஷ்காலி கிராமத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையில், சந்தேஷ்காலியில் உள்ள பெண்கள் உடல் ரீதியாகவும், பாலியல் ரீதியாகவும் துன்புறுத்தப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது என்று கூறப்பட்டது. அதனைத் தொடர்ந்து, சந்தேஷ்காலி விவகாரத்தை கொல்கத்தா உயர்நீதிமன்றம், ஷேக் ஷாஜகான் கட்டாயம் கைது செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து, ஷேக் ஷாஜகான் மற்றும் அவரது ஆதரவு நபர்களை மேற்கு வங்க போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
மேற்கு வங்க பா.ஜ.க தலைவரும், சந்தேஷ்காலி சம்பவத்தைக் வெளிக்கொண்டு வந்த பெண்களில் ஒருவருமான சிரியா பர்வீன், நேற்று (23-05-24) பா.ஜ.க கட்சியில் இருந்து ராஜினாமா செய்து திரிணாமுல் காங்கிரஸில் சேர்ந்தார் இந்த நிலையில், சந்தேஷ்காலி சம்பவம் முழுவதும் புனையப்பட்ட கதை என்று சிரியா பர்வீன் பரபரப்பு தகவலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், “சந்தேஷ்காலி மற்றும் பாசிர்ஹாட்டில் நடந்த பாலியல் துன்புறுத்தல் சம்பவத்திற்கு ஆளான பெண்களுடன் ஆதரவாக இருக்க முயற்சித்தேன். நான் சத்தியத்திற்காக போராடினேன். ஆனால், இது வெறும் புனையப்பட்டக் கதை, வசனம் என்று பிறகுதான் புரிந்தது. இதில் மொபைல், மீடியா, பணம் பயன்படுத்தப்பட்டது. மேலும், பா.ஜ.க தலைவர்கள் இதன் மூலம் சில அறிவுறுத்தல்களை வழங்கினர். திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக பா.ஜ.க போராடுகிறது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரும், தலைவர்களும் நியாயமானவர்கள் என்றும், அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும் தெரிந்ததும். போலியான விஷயங்களைத் தொடர மாட்டேன் என்று முடிவு செய்தேன்” எனத் தெரிவித்தார்.
முன்னதாக, ஷேக் ஷாஜகான் விவகாரத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட மூன்று பெண்களில் ஒருவர், தான் எந்தவித பாலியல் துன்புறுத்தலுக்கும் ஆளாகவில்லை என்றும் உள்ளூர் பா.ஜ.க கட்சியினர் வெற்று காகிதத்தில் தன்னை வற்புறுத்தி கையெழுத்திட வைத்ததாக போலீசிடம் புகார் அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.