Skip to main content

கரோனா தடுப்பூசிக்கு மறுப்பை தெரிவிக்கும் விவசாயிகள்!

Published on 02/03/2021 | Edited on 02/03/2021

 

farmers

 

கரோனா தொற்றை ஒழிக்க, நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கியது. முதற்கட்டமாக சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நாடு முழுவதும் உள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நேற்று (01.03.2021) தொடங்கியது. பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பலர் நேற்று தடுப்பூசி செலுத்திக்கொண்டனர்.

 

இந்தநிலையில், வேளாண் சட்டங்களை எதிர்த்து போராடி வரும் விவசாயிகள், கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள மறுப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாரதிய கிசான் யூனியன் (ஏக்தா உக்ரஹான்) அமைப்பின் தலைவர், "விவசாயிகளுக்குக் கரோனா என்பது இல்லை. நான் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மாட்டேன். ஆனால் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டாம் என யாரிடமும் கூறவும் மாட்டோம்" எனக் கூறியுள்ளார்.

 

பாரதிய கிசான் யூனியன் அமைப்பு, “உள்ளூர் நிர்வாகம் கரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள ஏற்பாடு செய்தால், தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் தங்கள் தலைவர் ராகேஷ் திகைத்திற்கு எந்தப் பிரச்சனையும் இல்லை” எனத் தெரிவித்துள்ளது. அதேபோல், சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர் ஒருவர், "கரோனா வைரஸுக்கு நாங்கள் பயப்படவில்லை. டெல்லி எல்லைகளில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தர்ணா போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால் அங்கு ஒரு கரோனா வைரஸ் கூட கண்டறியப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.

 

டெல்லி எல்லைகளில் போராடி வரும் விவசாயிகள் யாரேனும் விரும்பினால் தடுப்பூசியை செலுத்திக்கொள்ளலாம் என்றும், அதனைத் தடுக்க மாட்டோம் எனவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்