மணிப்பூர் மாநிலத்தில் முதல்வர் பைரன் சிங் தலைமையிலான பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கடந்த 2023 ஆம் ஆண்டு மணிப்பூரில் மெய்தி - குக்கி சமூகங்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல், ஆளும் பாஜக அரசின் அலட்சியத்தால் கலவரமாக மாறியது. மெய்தி மக்களை, பழங்குடிப் பட்டியலில் சேர்க்கும் பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்ப ஆளும் பாஜக அரசுக்கு மணிப்பூர் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், அதனை எதிர்த்து குக்கி பழங்குடியின மக்கள் நடத்திய அமைதிப் பேரணியில் வன்முறை வெடிக்க, மாநிலமே கலவர பூமியாக மாறியது. வன்முறைக்கு இடையில் குக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நிர்வாணமாக இழுத்துச் செல்லப்பட்ட வீடியோ வெளியாகி, இந்திய நாட்டையே உலுக்கியது. இந்தச் சம்பவம் நடைபெற்று ஒரு ஆண்டு ஆகியும், இன்றுவரை மணிப்பூரில் கலவரம் ஓய்ந்தபாடில்லை.
இந்தக் கலவரத்தின் உச்சமாக குக்கி இனப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த பின், நிர்வாணமாக அடித்து கொடூரமாகச் இழுத்துச் செல்லப்பட்டது ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கி எடுத்தது. இந்தக் கொடூரச் சம்பவத்துக்கு பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இது தொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரணை நடத்தி வருகிறது.
இது தொடர்பாக குவஹாத்தியில் உள்ள சி.பி.ஐ நீதிமன்றத்தில் சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது, ‘அந்த வன்முறையின் போது, பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பிறகு அவர்களை அடித்து கொடூரமாக இழுத்துச் செல்லப்பட்டிருக்கின்றனர். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள், சாலையோரத்தில் நின்ற போலீஸ் வாகனத்தில் ஏறி, அங்கிருந்த போலீசாரிடம் உதவி கேட்டுள்ளனர். ஆனால், அந்தப் போலீஸ்காரர்கள், வாகனத்தை எடுக்க சாவி இல்லை என்று கூறி, அந்தக் கலவரக் கும்பலிடமே அவர்களை வலுக்கட்டாயமாக விட்டுச் சென்றுள்ளனர். அதன் பின்னரே, அவர்களை நிர்வாணமாக அந்தக் கும்பல் இழுத்து செல்லப்பட்டிருக்கிறது’ எனக் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஜூலை மாதம் மணிப்பூர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட ஹுய்ரேம் ஹெரோடாஸ் மெய்டே மற்றும் மேலும் ஐந்து பேர் மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை, பெண்ணின் நாகரீகத்தை சீர்குலைத்தல் மற்றும் குற்றச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக சி.பி.ஐ தெரிவித்துள்ளது.