காஷ்மீரில் கல்வீசுபவர்களின் மீது துப்பாக்கிச்சூடு நடத்தவேண்டும் என பா.ஜ.க. எம்.பி. தெரிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினர் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு இடையே அடிக்கடி தாக்குதல்கள் நடப்பது வழக்கம். இந்தத் தாக்குதல்களின்போது கிளர்ச்சியாளர்களாக இருக்கும் சாதாரண பொதுமக்களும் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். இந்தத் தாக்குதல்களில் ஈடுபட்டவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நடைபெற்ற விளையாட்டு விழாவில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், டெல்லியில் இருந்தபோது காஷ்மீரைச் சேர்ந்த கால்பந்தாட்ட வீராங்கனை அஸ்ஃபான் அஷிக்கை சந்தித்ததாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், ஒரு காலத்தில் தானும் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்டவள்தான். ஆனால், விளையாட்டு என் வாழ்க்கையை மாற்றியது. மக்கள் சுலபமாக திசைதிருப்பப் படுகிறார்கள் என அஸ்ஃபான் தெரிவித்ததாக கூறினார். அதைத்தொடர்ந்து கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் மீதான வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
இதையடுத்து, பிப்ரவரி மாதம் கல்வீச்சுத் தாக்குதல்களில் ஈடுபட்ட ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் விடுவிக்கப்பட்டனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பா.ஜ.க. மாநிலங்களவை எம்.பி.யும், முன்னாள் ராணுவ அதிகாரியுமான டி.பி.வத்ஸ், கல்வீசித் தாக்குதலில் ஈடுபடுபவர்களை விடுவிப்பது தொடர்பான செய்தியைக் கேள்விப்பட்டேன். என்னைப் பொருத்தவரை அவர்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என தெரிவித்துள்ளார்.