அமெரிக்காவின் நான்காவது பெருநகரமான ஹூஸ்டன் மாநகரத்தில் 1927ஆம் ஆண்டு ஹூஸ்டன் பல்கலைக்கழகம் தோற்றுவிக்கப்பட்டது. இந்த பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி, இலக்கியம், பண்பாடு மற்றும் தமிழ்மொழி ஆராய்ச்சிக்காக தமிழ் இருக்கை நிறுவிட தமிழ்நாடு அரசு இதுவரை மூன்று கோடியே நாற்பத்து நான்கு இலட்சத்து நாற்பத்து ஓராயிரத்து எழுநூற்று ஐம்பது ரூபாய் (ரூ. 3,44,41,750)வழங்கியுள்ளது. தற்போது மேலும் தமிழ்நாடு அரசு சார்பில் இந்திய ரூபாய் மதிப்பில் ஒரு கோடியே ஐம்பது இலட்சம் ரூபாய் (ரூ.1.50,00,000) வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் வழங்கப்பட்ட வாழ்த்துரைச் செய்தியில், “தமிழின் தொன்மையும், செறிவும், வளமும் நம் அனைவரையும் என்றும் பெருமிதம் கொள்ளச் செய்யும். அதே சமயம், தன்னைத் தொடர்ந்து புதுப்பித்துக் கொண்டே வருவதால் நம் தமிழ்மொழி என்றும் புதுமையுடன் திகழ்கிறது என்பதிலும் நாம் பெருமையடைகிறோம். அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் அமைந்துள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கையை நிறுவிட சீரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை அறிந்து மகிழ்கிறேன்.
தமிழ்ப் பண்பாட்டின் குன்றாத வளமையைப் பாரெங்கும் பறைச்சாற்றுவதிலும், எதிர்கால தலைமுறையினரை ஊக்கப்படுத்துவதிலும், பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் தமிழர்களின் வர்த்தகம், பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை மேம்படுத்துவதிலும் ஹூஸ்டன் தமிழாய்வுகள் இருக்கை சிறப்பான பங்காற்றும் என நான் உறுதியாக நம்புகிறேன். கடல்கடந்தும் தமிழால் இணைந்து வாழ்ந்துவரும் அனைத்துத் தமிழ் நெஞ்சங்களுக்கு என் இனிய நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தி கடந்த 12ஆம் தேதி (12.12.2024) வியாழக்கிழமைய பிற்பகல் 02.00 மணியளவில் அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் ஆய்வுகள் இருக்கை சார்பாக நடைபெற்ற விழாவில் படிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசின் சார்பாக தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளர் வே. ராஜாராமன், தமிழ் வளர்ச்சி இயக்குநர் ந. அருள் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது ஹூஸ்டன் தமிழ் ஆய்வுகள் இருக்கை அமைப்பின் தலைவர் சொக்கலிங்கம் சாம் கண்ணப்பன், அதன் செயலாளர் பெருமாள் அண்ணாமலை ஆகியோர் உடன் இருந்தனர்.