மதுரை மாவட்டம் மேலூர் வட்டத்திற்கு உட்பட்ட அரிட்டாபட்டி உள்ளிட்ட பல கிராமங்களில் சுமார் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு ஏலம் நடத்தியது. இதில் வேதாந்தா குழுமத்தின் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம் ஏலம் எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அப்பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் இந்த சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதோடு அப்பகுதியில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி (29.11.2024) கடையடைப்பு போராட்டமும் நடத்தினர். அதே சமயம் டங்ஸ்டன் சுரங்கத்தை எதிர்த்து மேலூரில் போராட்டம் நடத்தி வருபவர்களிடம் அமைச்சர் மூர்த்தி, “டங்ஸ்டன் சுரங்க ஆய்வுக்கு கூட தமிழக அரசு அனுமதிக்காது” என உறுதி அளித்துள்ளார். இதனையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. இதற்கிடையே தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடந்த நவம்பர் 28ஆம் தேதி (28.11.2024) கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், ‘மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திட வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக் கூடாது’ என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதனைத் தொடர்ந்து தமிழக சட்டப்பேரவையில், அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்க உரிமையை ரத்து செய்ய வலியுறுத்தித் தனித் தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. மேலும் இந்த தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கத் திட்டமிட்டுள்ள இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு தெரிவிக்கையில், “மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைய உள்ள இடத்தில் 4 பல்லுயிர் பாரம்பரிய தலம் உள்ளதாக கருத்துருக்கள் வந்தன. எனவே டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் இடத்தை மறு ஆய்வு செய்ய மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
முன்னதாக கடந்த பிப்ரவரியில் ஏலம் தொடங்கியது முதல், நவம்பர் 7ஆம் தேதி ஏல முடிவு அறிவிக்கும் வரை தமிழக அரசிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. இது தொடர்பாகத் தமிழக அரசுடன் பலமுறை கலந்தாலோசித்தபோதும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. பொருளாதார வளர்ச்சிக்காகக் கனிமங்களை ஏலம் விடுவதே சுரங்க அமைச்சகத்தின் பங்கு ஆகும். அதே சமயம் கூட்டு உரிமம், கனிம சுரங்கத்தைக் குத்தகை விடக் கையெழுத்திடுவது மாநில அரசால் செய்யப்படுகிறது. எனவே டங்ஸ்டன் விருப்ப ஏலதாரருக்கு ஒப்பந்தக் கடிதம் வழங்கும் பணி நிறுத்த தமிழக அரசுக்குக் கோரிக்கை வைக்கப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.