தேர்தல் சமயங்களில் பேஸ்புக் எனப்படும் சமூக வலைதளத்தில் தேர்தல் மற்றும் அரசியல் கட்சிகள் தொடர்பான விளம்பரங்கள் பரப்பப்படுவதை அந்நிறுவனம் கைவிட வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளது.
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 126 -ஆம் விதிகளின்படி தொலைக்காட்சி போன்ற ஊடங்களில் தேர்தல் நடக்கவிருக்கும் 48 மணிநேரத்திற்கு முன்னரே தேர்தல் மற்றும் அரசியல் சார்ந்த விளம்பர செய்திகளை ஒளிபரப்ப கூடாது. இந்த சட்டத்தினை அடிப்படையாக கொண்டு இதுபோன்ற கருவி ஊடகங்கள் குறித்த சிறப்பு ஆலோசனை கூட்டம் இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் சமீபத்தில் நடைபெற்றது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தேர்தலுக்கு முன்னதாகவே அதாவது 48 மணிநேரத்திற்கு முன் தேர்தல் தொடர்பான விளம்பரங்களை ரத்து செய்ய வேண்டும் என இந்திய தேர்தல் ஆணையம் பேஸ்புக் நிறுவனத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனால் அந்த கோரிக்கைக்கு இதுவரை பதிலளிக்காமல் இருந்த பேஸ்புக் நிறுவனம் தற்போது அதுபற்றி பரிசீலித்து வருவதாக கூறியுள்ளது.
மேலும் பேஸ்புக் நிறுவனத்தின் பிரதிநிதி ஸ்னோஹாஸிஸ் இதுபற்றிய அறிவிப்பில் பேஸ்புக்கில் தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டால் அதை புகாராக தெரிவிக்க சிறப்பு வசதி செய்யப்படும். அப்படியும் மீறி தேர்தல் விளம்பரங்கள் மற்றும் விதிமீறல்கள் நடைபெற்றால் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.