நேஷனல் ஹெரால்டு பத்திரிகை பங்கு விற்பனை விவகாரம் தொடர்பாக அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதியின் மக்களவை உறுப்பினருமான ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் செயல் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது.
இது தொடர்பாக பலமுறை ராகுல் காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகி இருந்த நிலையில் சோனியா காந்தி கரோனா காரணமாக சிகிச்சை பெற்று வந்ததால் ஆஜராக முடியாத சூழல் ஏற்பட்டது. இதனால் சோனியா காந்தி தரப்பில் ஆஜராவதற்கு நேரம் கேட்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கடந்த 11 ஆம் தேதி அமலாக்கத்துறை சார்பில் சோனியா காந்திக்கும் மீண்டும் இதுதொடர்பாக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. அதில் வரும் 21 ஆம் தேதி சோனியா காந்தி நேரில் ஆஜராக வேண்டும் எனச் சம்மனில் குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இன்று சோனியா காந்தி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக இருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.