
வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நேற்று (02-04-25) நாடாளுமன்ற மக்களவையில் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு, திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணிகளான எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தபோதிலும், இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. இந்த விவாதத்தில், மத்திய அமைச்சர் அமித்ஷா, திமுக எம்.பி ஆ.ராசா, சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், ராகுல் காந்தி உள்ளிட்டோர் அனல் பறக்க பேசினர்.
12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர், எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு ஆதரவாக பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கப்பெற்றதால், இந்த மசோதா மக்களவையில் நிறைவேறியது.
இந்த நிலையில் இதுகுறித்து தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள மதுரை எம்.பி. சு.வெங்கடேசன், “நேற்று நள்ளிரவு இரண்டு மணி அளவில் மக்களவையில் வக்ஃப் வாரிய திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. சுமார் 10 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்ற விவாதத்தில் ஆளும் கட்சியின் தரப்பில் பேசிய பலரும் வெறுப்பை கக்கித் தீர்த்தார்கள். எந்த வெறுப்புணர்வும், பேதங்களும், பிரிவினை ஏற்படுத்திய காயங்களும் மக்கி மண்ணோடு மறைய வேண்டுமென இந்திய சமூகம் தொடர்ந்து முயன்று வந்ததோ, அவற்றையெல்லாம் மீண்டும் கிளறி தேசத்தின் தலைப்பு செய்தியாக்கும் அரசியலை பாஜக செய்து முடித்தது.
அடுத்து வரும் நாட்களில் அவைகள் நாட்டின் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்கப்படும். இன்று இஸ்லாமியர்களுக்கு நேர்வதே நாளை கிறிஸ்துவர்களுக்கும். நாளை மறுநாள் பட்டியலினம், மற்றும் பழங்குடியினருக்கும். அதற்கு மறுநாள் பிற்பட்டோருக்கும். பாஜகவினருக்குத் தேவை கடந்த காலத்தின் துர்நாற்றம். எனவே அவற்றையே முழுநேரமும் சுவாசிக்க நினைக்கிறார்கள்.
நமக்கு தேவை நிகழ்காலத்துக்கான நல்வாழ்வும், எதிர்காலத்துக்கான நற்கனவும். பழைய பேய்களை நம் கனவுகளின் மீதும், சிந்தனையின் மீதும் ஏவிவிடும் பத்தாம்பசலிகளுக்கு எதிராக சலிப்பின்றி போரிடுவோம்” என்று விமர்சித்துள்ளார்.