
ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழா வட மாநிலங்களில் மிக விமர்சையாகக் கொண்டாடப்படும் விழாவாகும். அதிலும் குஜராத், உத்தரப் பிரதேசம், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் வெகு விமர்சையாக நவராத்திரி விழாக்கள் நடைபெற்று வருகிறது. நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் நடனம், வகைவகையான உணவு பரிமாறுதல், புத்தாடைகள் என விதவிதமாக கொண்டாடப்படும்.
அந்த வகையில், இந்தாண்டின் நவராத்திரி விழா கடந்த மார்ச் 30 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த விழா ஏப்ரல் 6ஆம் தேதி வரை என 9 நாள்கள் கொண்டாடப்படவுள்ளது. இந்த நிலையில், நவராத்திரியின் போது மாதவிடாய் வந்ததால் பெண் ஒருவர் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்சியைச் சேர்ந்தவர் பிரியன்சா சோனி (36). இவருக்கு முகேஷ் சோனி என்பவரோடு திருமணம் நடைபெற்று இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த சூழ்நிலையில், நவராத்திரியின் முதல் நாளான கடந்த மார்ச் 30ஆம் தேதியன்று பிரியன்சா சோனிக்கு மாதவிடாய் வந்துள்ளது. இதனை தீட்டு என்று கருதி, நவராத்திரி பூஜை மற்றும் விரதம் ஆகியவற்றை பிரியன்சா செய்யாமல் இருந்துள்ளார். பூஜையும், விரதமும் தடைப்பட்டு போனதால் பிரியன்சா சோனி மிகுந்த மனவருத்தத்தில் இருந்துள்ளார்.
மாதவிடாய் வருவது இயற்கை தான் என்று பிரியன்சா சோனியின் கணவரான முகேஷ், அவரை பலமுறை சமாதானப்படுத்தியுள்ளார். ஆனாலும், அதை பிரியன்சா ஏற்க மறுத்துள்ளார். எதையோ இழந்தது போல், ஒவ்வொரு நாளும் மிகுந்து கவலையோடு இருந்துள்ளார். இந்த சூழ்நிலையில், கடைக்குச் செல்வதற்காக முகேஷ் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். வீட்டில் தனியாக இருந்த பிரியன்சா, விஷத்தை அருந்தியுள்ளார். இந்த விவகாரம் அவரது குடும்பத்திற்கு தெரியவர, உடனடியாக அவரை மீட்டு அருகே உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
சிகிச்சை முடிந்த பிறகு டிஸ்ஜார்ஜ் செய்யப்பட்டு மீண்டும் பிரியன்சா வீட்டுக்கு வந்துள்ளார். ஆனால், அவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வந்துள்ளது. இதனையடுத்து, மீண்டும் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த பிரியன்சா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.