
நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ நேற்று (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த விவாதத்திற்கு திமுக, காங்கிரஸ், சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் நடைபெற்றது. சுமார் 12 மணி நேர தொடர் விவாதத்திற்கு பிறகு, நள்ளிரவு நேரத்தில் திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடைபெற்றது.
இந்த வாக்கெடுப்பில், வக்ஃப் வாரிய மசோதாவிற்கு ஆதரவாக 288 உறுப்பினர்கள் வாக்களித்தனர். எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அதனைத் தொடர்ந்து இந்த மசோதா மக்களவையில் இன்று (03.04.2025) அதிகாலை நிறைவேறியது. அதனைத் தொடர்ந்து மாநிலங்களவையில் வக்ஃப் சட்டத்திருத்த மசோதா தாக்கல் இன்று செய்யப்பட்டது. இதன் மீதான விவாதத்தில் திமுக நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா கலந்து கொண்டு பேசினார். அதில், “இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரான அப்துல் கலாம் போல பல இஸ்லாமியர்கள் இந்த நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிருக்கிறார்கள்.
இப்போது இங்கே உள்ள அப்துல்லா என் தம்பி, நான் அவர் அண்ணன். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறும். அப்போது இஸ்லாமியர்கள், பக்தர்களுக்கு குளிர்பானங்கள் வழங்குவார்கள். இதற்குப் பெயர் தான் ஒற்றுமை. இந்த நாட்டில் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்கள் மத நல்லிணக்கத்தோடு இருக்கின்றன. ஒன்றிய அரசிற்கு காதுகள் இருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கு அது செவிமடுக்காது. கண்கள் இருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் மீது அதன் பார்வைபடாது. வாய் இருக்கிறது. அது அவதூறுகளை மட்டுமே பரப்பும். கைகள் இருக்கிறது. அது தன் அதிகாரத்தை கொண்டு பாதிக்கப்பட்டவர்களை ஒடுக்க மட்டுமே செய்கிறது” எனப் பேசினார்.