
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த பாம்பன் ரயில் பாலத்திற்குப் பதிலாக ரூ.550 கோடி செலவில் 2.6 கி.மீ அளவில் புதிய பாலம் கட்டிமுடிக்கப்பட்டது. இந்த புதிய பாலம் ஏப்ரல் 6ஆம் தேதி திறந்து வைக்கப்பட உள்ளது. இதற்காகப் பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளார். அதன்படி பிரதமர் மோடி இந்த பாலத்தை ஏப்ரல் 6ஆம் தேதி (06.04.2025) திறந்து வைக்க உள்ளார். இதற்கான சிறப்பு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
இத்தகைய சூழலில் தான் பாம்பன் பாலம் அருகே அமைந்துள்ள பள்ளிவாசல் கோபுரத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக மதச் சின்னத்தைப் பதித்திருந்தனர். இதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளதா? என காவல்துறை சார்பில் கேள்வி எழுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பள்ளிவாசல் சார்பில் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் காவல் துறை சார்பில், ‘மதம் சார்ந்த சின்னங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கும்போது மாவட்ட ஆட்சியரின் அனுமதியோடு தான் வைக்க வேண்டும் என்று விதிகள் உள்ளன. எனவே அவற்றை அகற்ற உத்தரவிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து மத சின்னத்தைப் பள்ளிவாசல் சார்ப்பில் மறைக்கப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த மாதம் 16ஆம் தேதி இதே பள்ளிவாசலில் கோபுரத்தில் வண்ண விளக்குகள் பொருத்தப்பட்டன. அப்போது மாவட்ட நிர்வாகம் சார்பில் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகுகள் சென்று வருகின்றன. இதனைக் கண்காணிக்க வடக்கு பகுதியில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இதனையொட்டி கடலோர காவல்படையின் விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கப்பல்கள் கடந்து செல்கின்றன. இதனால் பள்ளிவாசலில் பொருத்தப்பட்டுள்ள வண்ண விளக்குகளால் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது. அனுமதிக்கப்பட்ட உயரத்தில் மின் விளக்குகளை வைத்துக்கொள்ளுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்விளக்குகள் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.