புதுச்சேரி மாநிலத்துக்கு என்.எல்.சியின் மின்தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறப்படுகிறது. இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் ஒவ்வொரு ஆண்டும் மின் கட்டணத்தை நிர்ணயித்து வருகிறது. 2019-2020-ஆம் ஆண்டு மின்கட்டண நிர்ணயம் தொடர்பாக மின்நுகர்வோர்களின் கருத்துக்கேட்பு கூட்டம் கடந்த ஜனவரி மாதம் நடந்தது.
அந்த கூட்டத்தில் அரசியல் கட்சியினர், பொது நல அமைப்பினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மின்கட்டணத்தை உயர்த்தக்கூடாது என்று கோரிக்கை விடுத்தனர். அப்போது இந்த ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்படாது என அதிகாரிகள் உறுதியளித்தனர். இதற்கிடையே தற்போது திடீரென மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரைப்படி 4.59 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் தற்காலிகமான துணை கூடுதல் கட்டணம் 4 சதவீதம் தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது. எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் நிலையங்களுக்கு மத்திய அரசு வரையறுத்துள்ள விதிகளின்படி சராசரியாக யூனிட்டுக்கு ரூ.5.68 வசூலிக்கப்பட உள்ளது. வீட்டு உபயோகப் பயன்பாட்டிற்கு தற்போது ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை ஒரு யூனிட்டுக்கு ரூ.1.30 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது யூனிட்டுக்கு ரூ.1.50 ஆக உயர்த்தப்படுகிறது. அதேபோல், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95-ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்கிறது.
வர்த்தக பயன்பாட்டுக்கு நிரந்தர கட்டணம் ரூ.120 சேர்த்து 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.5.15ல் இருந்து ரூ.5.50 ஆகவும், 101 முதல் 250 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.6.15ல் இருந்து ரூ.6.50 ஆகவும், 250 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.6.85ல் இருந்து ரூ.7.20 ஆகவும் அதிகரிக்கிறது.
குடிசைத்தொழில் பயன்பாட்டுக்கு ரூ.40 நிரந்தர கட்டணத்துடன் 100 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.1.30-ல் இருந்து ரூ.1.50 ஆகவும், 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.2.25-ல் இருந்து ரூ.2.50 ஆகவும், 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு ரூ.3.95ல் இருந்து ரூ.4.35 ஆகவும், 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு ரூ.5.10ல் இருந்து ரூ.5.60 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையத்தின் ஒப்புதலுடன் புதுச்சேரி மின்துறை இவ்வாறு கட்டணத்தை உயர்த்தியுள்ளது. இந்த உயர்வு அடுத்த மாதம்(ஜூன்) 1-ந் தேதி முதல் அமலுக்கு வருகிறது. திடீர் மின் கட்டண உயர்வால் பொதுமக்கள், வணிகர்கள், சிறுதொழில் புரிவோர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இந்த கட்டண உயர்வை அமுல்படுத்தக்கூடாது என பல்வேறு பொது நல அமைப்புகளும், அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் மீறி கட்டண உயர்வு நடமுறைப்படுத்தப்பட்டால் போராட்டங்கள் நடத்தவும் தயாராகி வருகின்றனர்.