விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில் சுதிப்தோ சென் இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'தி கேரளா ஸ்டோரி’. இப்படத்தில் அதா சர்மா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் சிம்புவின் 'இது நம்ம ஆளு' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து பிரபுதேவா நடிப்பில் வெளியான 'சார்லி சாப்ளின் 2' படத்தின் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததின் மூலம் நடிப்பில் அறிமுகமானார்.
'தி கேரளா ஸ்டோரி’ படத்தின் டீசர் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. இந்த டீசரில் ஹிஜாப் அணிந்து வரும் ஒரு பெண், தான் பிற மதத்திற்கு மாற்றப்பட்டு ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் தள்ளப்பட்டுள்ளேன். இதே போல் 32 ஆயிரம் பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டு சிரியா, ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளுக்குக் கடத்தப்படுவதாகத் தெரிவிக்கிறார். இந்த டீசர் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
இதனைத் தொடர்ந்து இப்படத்தில் தவறான தகவல்களைப் பரப்புகிறார்கள் எனக் கூறி கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவரும், கேரள காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவருமான வி.டி.சதீசன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "நானும் அந்த டீசரை பார்த்தேன். அதில் சொல்லப்பட்டுள்ள கருத்துகள் முற்றிலும் தவறானவை. கேரளாவில் அதுபோல எதுவும் நடக்கவில்லை. மற்ற மாநிலங்களின் முன் கேரள மாநிலத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் இது உள்ளது. வெறுப்புணர்வு பரப்பும் வகையில் உள்ள இதனைத் தடை செய்ய வேண்டும்" எனப் பேசினார்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், "மதச்சார்பின்மை கொண்ட கேரள மாநிலத்தில் திட்டமிட்டு பிரிவினைவாதத்தை தூண்டும் விதமாக 'தி கேரளா ஸ்டோரி' இந்தி படத்தின் ட்ரெய்லர் அமைந்திருக்கிறது. சங்பரிவாரின் கொள்கையை பரப்புரை செய்வதற்காக எடுக்கப்பட்ட படம்தான் இது என்பதை ட்ரெய்லரை பார்க்கும் போது தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது" என்று தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் மே 5-ம் தேதி வெளியாகிறது. இதற்கு கேரளாவில் கடுமையான எதிர்ப்பு எழுந்திருக்கிறது.
இந்நிலையில், சர்ச்சைக்குள்ளாகியுள்ள ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படத்திற்கு தடைவிதிக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் நிசாம் பாஷா என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உடனடி வழக்காக விசாரிக்கவும் கோரிக்கை வைத்திருந்தார். இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கே.எம்.ஜோசப் மற்றும் பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதில் நீதிபதிகள், “வெறுப்பு பேச்சுகளில் பல வகைகள் உள்ளன. இந்தத் திரைப்படத்திற்கு தணிக்கை குழு அனுமதி அளித்து சான்றிதழ் வழங்கியுள்ளது” என்று தெரிவித்தனர். மேலும் நீதிபதி பி.வி.நாகரத்னா, “மனுதாரர் முதலில் உயர்நீதிமன்றத்தை நாடவேண்டும்” என்றார். அதற்கு மனுதாரரான நிசாம் பாஷா, வரும் வெள்ளிக்கிழமை படம் வெளியாகவுள்ளதால் நேரமின்மை காரணமாக உச்சநீதிமன்றம் வந்ததாகத் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து மனு நிராகரிக்கப்பட்டது.