Skip to main content

விற்பனைக்கு வரும் '2 டிஜி பவுடர்' கரோனா மருந்து; யாரெல்லாம் உட்கொள்ளக்கூடாது..?

Published on 28/06/2021 | Edited on 28/06/2021

 

2 DG

 

இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு அமைப்பும் (DRDO), டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனமும் இணைந்து கரோனா சிகிச்சையில் பயன்படுத்தும் வகையில் தண்ணீரில் கலந்து குடிக்கும் பவுடர் வடிவிலான மருந்து ஒன்றை உருவாக்கியது. 2 டிஜி பவுடர் என அழைக்கப்படும் இந்த மருந்திற்கு அவசரக்கால பயன்பாட்டிற்கான அனுமதி வழங்கப்பட்டது.

 

இந்நிலையில் இந்த மருந்தின் வர்த்தக ரீதியிலான விநியோகத்தைத் தொடங்குவதாக, டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது. முதலில் மெட்ரோ நகரங்களிலும், முதல் நிலை நகரங்களிலும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் என்றும், அதன்பிறகு இந்தியா முழுவதும் இந்த மருந்தின் விநியோகம் நீட்டிக்கப்படும் என்றும் டாக்டர் ரெட்டீஸ் லெபாரட்டரீஸ் தெரிவித்துள்ளது. 2 டிஜி பவுடரின் ஒரு பாக்கெட் விலை 990 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மருந்தை மிதமான கரோனா பாதிப்பு உள்ளவர்களுக்கும் தீவிர பாதிப்பு உள்ளவர்களுக்கும் மட்டுமே, அதுவும் மருத்துவர்கள் பரிந்துரையின் அடிப்படையில் மட்டுமே வழங்க வேண்டும் எனவும், இந்த மருந்து மருத்துவமனைகளுக்கு மட்டுமே விற்கப்படும் எனவும், பொதுமக்களுக்கு அளிக்கப்படாது எனவும் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

மேலும், கர்ப்பிணிப் பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் 18 வயதுக்குக் குறைவான நோயாளிகளுக்கு இந்த 2 டிஜி பவுடரை வழங்கக்கூடாது என டி.ஆர்.டி.ஓ தெரிவித்துள்ளது. அதேபோல் கட்டுப்பாடற்ற நீரிழிவு நோய், கடுமையான இருதய பிரச்சனை, மோசமான சுவாச கோளாறு நோய்க்குறி, கடுமையான கல்லீரல் மற்றும் சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் மீது இந்த மருந்து இதுவரை பரிசோதிக்கப்படாததால், இந்த குறிப்பிட்ட பாதிப்பு உள்ளவர்களுக்கு 2 டிஜி பவுடரை வழங்கும்போது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமெனவும் டி.ஆர்.டி.ஓ அறிவுறுத்தியள்ளது. 
 

 

 

சார்ந்த செய்திகள்