Skip to main content

"அவரை ஆச்சரியமாகப் பார்த்தேன்" - பா.ஜ.க. எம்.பி.யை பாராட்டிய தயாநிதிமாறன்!

Published on 14/07/2021 | Edited on 14/07/2021

 

 

dmk mp dhayanidhi maran tweet delhi to chennai indigo flight

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டதில் கலந்து கொள்வதற்காக டெல்லி சென்றிருந்த தி.மு.க.வைச் சேர்ந்த எம்.பி.யான தயாநிதி மாறன், கூட்டத்தை முடித்துக் கொண்டு சென்னை புறப்படுவதற்காக டெல்லி விமான தளத்தில் உள்ள இண்டிகோ விமானத்தில் (Indigo flight 6E864) அமர்ந்திருந்த போது, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும் மக்களவையின் மூத்த உறுப்பினருமான ராஜீவ் பிரதாப் ரூடியுடன் நடந்த சுவாரஸ்ய கலந்துரையாடல் பற்றி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

 

இது குறித்து எம்.பி. தயாநிதி மாறன் தனது அதிகாரப்பூர்வ் ட்விட்டர் பக்கத்தில், "இன்று (13/07/2021) நாடாளுமன்ற மதிப்பீட்டுக் குழு கூட்டம் முடிந்து டெல்லியிலிருந்து சென்னைக்கு இன்டிகோ விமானத்தில் பயணித்தேன். போர்டிங் முடித்து விமானத்தின் உள்ளே அமர்ந்திருந்தேன். அப்போது “நீங்களும் இதே விமானத்தில்தான் வருகிறீர்களா?” என்று விமானி உடையிலிருந்த ஒருவர் என்னிடம் கேட்டார். அவர் முகக்கவசம் அணிந்திருந்ததால் அவரை எனக்கு அடையாளம் தெரியவில்லை. ஆனால் அவரது குரல் ரொம்பவே பரிச்சயமாகத் தெரிந்தது. நானும் தலையசைத்தபடி யார் அவர் என யோசித்தேன். அவரோ என்னை பார்த்தபடியே சிரித்தது முகக்கவசத்தை மீறி அவரது கண்களில் தெரிந்தது.

 

“ஆக உங்களுக்கு என்னை அடையாளம் தெரியவில்லை” என்றார் வியப்போடு. பிறகுதான் தெரிந்தது, அவர் என்னுடைய சகாவும் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எனது தந்தை மறைந்த முரசொலி மாறன் ஒன்றிய வர்த்தக அமைச்சராக பணியாற்றிய போது அதே துறையின் இணையமைச்சராக பணியாற்றியவரும், எனது இனிய நண்பருமான ராஜீவ் பிரதாப் ரூடி என!

 

இரண்டு மணி நேரத்துக்கு முன்புதான் என்னுடன் அந்த மதிப்பீட்டுக் குழு கூட்டத்தில் பங்கேற்றவர், இப்போது அரசியல்வாதி தோற்றத்திலிருந்து விமானியாக மாறி இருப்பதை ஆச்சரியமாகப் பார்த்தேன். அவரிடம் மகிழ்ச்சியுடன் “நீங்கள் ஒரு விமானியாக பறப்பதை என்னால் நம்ப முடியவில்லை” என்றேன். அதற்கு ரூடி சிரித்தபடி “ஆம், நீங்கள் என்னை அடையாளம் காண முடியாதபோதே அதை அறிந்து கொண்டேன். நான் தொடர்ச்சியாக பறந்து கொண்டிருக்கிற ஒரு விமானி” என்றார்.

 

எனது இனிய நண்பரும் சகாவும் ஒரு விமானியாக இருப்பதைக் கண்டு பெருமைப்பட்டேன். உண்மையில் உயரத்தில் கிடைத்திருக்கிறது ஓர் உயரிய ஞாபகம்! ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினராக ஆனபிறகும் விமானியாக இருப்பது அபூர்வம் அல்லவா!

 

நீண்ட நாட்களுக்கு இந்த இனிய நிகழ்வு என் நினைவில் நிச்சயமாய் நிழலாடிக்கொண்டிருக்கும், எங்களை பத்திரமாக டெல்லியிலிருந்து சென்னைக்கு அழைத்து வந்ததமைக்கு நன்றிகள் கோடி விமானி ராஜீவ் பிரதாப் ரூடி எம்.பி. அவர்களே!!!" என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்