டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் தொடர்பான அவசர சட்டத்திற்கு எதிராக டெல்லி அரசு தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு விசாரிக்கும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிடமாற்றம் உள்ளிட்டவை குறித்த அதிகாரம் டெல்லி துணை நிலை ஆளுநர், மத்திய அரசிடம் இருந்தது. இதையடுத்து இந்த அதிகாரங்களை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என ஆளும் ஆம் ஆத்மி கட்சி கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் குடிமைப் பணி அதிகாரிகள் நியமனம் மற்றும் பணியிட மாற்றம் ஆகியவற்றில் டெல்லி அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.
இதையடுத்து டெல்லியில் குடிமைப் பணி அதிகாரிகளை நியமிக்க மத்திய அரசுக்கு அதிகாரம் அளிக்கும் வகையில் அவசர சட்டம் இயற்றப்பட்டது. இதனை எதிர்த்து டெல்லியில் அரசு அதிகாரிகள் நியமனம் பற்றிய அவரச சட்டத்திற்கு எதிரான வழக்கு ஆம் ஆத்மி அரசு சார்பில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட பகுதி அமர்வு விசாரித்து வந்த நிலையில் இனி இந்த வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.