Skip to main content

காரின் மேல் பகுதியில் அமர்ந்து மது அருந்திய இருவர் கைது

Published on 31/07/2023 | Edited on 31/07/2023

 

 Two people were arrested for drinking while sitting on the top of the car

 

காரின் மேற்பகுதியில் அமர்ந்துகொண்டு மது அருந்தியபடி பயணித்த இரண்டு இளைஞர்களைப் போலீசார் கைது செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்துள்ளது.

 

அண்மையாகவே சமூக வலைத்தளங்களில், பொது இடங்களிலேயே மது அருந்துவது, பொதுமக்களுக்கு இடையூறு செய்வது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில், நடுச்சாலையில் ஓடும் காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு இரண்டு இளைஞர்கள் மது அருந்தியபடியே சென்று கொண்டிருந்தனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவியது. பல்வேறு தரப்பிலிருந்து புகார்கள் குவிந்த நிலையில், உத்தரப்பிரதேச போலீசார் 2 இளைஞர்களையும் கைது செய்ததோடு அவர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். தற்போது இளைஞர்கள் இருவர் காரின் மேல் பகுதியில் அமர்ந்து கொண்டு மது அருந்தும் இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

பொது இடத்தில் இளம்பெண் மீது தாக்குதல்; வைரலான வீடியோ காட்சி

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Viral video footage of Incident on girl in public place at chennai

சென்னை கோயம்பேடு பகுதியில், பூந்தமல்லி மார்க்கமாக செல்லும் மேம்பாலத்தில், நேற்று (26-04-24) ஒரு இளைஞரும், ஒரு இளம்பெண்ணும் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் ஒரு கட்டத்தில் முற்றியதால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், தன்னுடைய வாகனத்தை நிறுத்தி, தன்னுடன் வந்த அந்த பெண்ணை சரமாரியாகத் தாக்கியுள்ளார். மேலும், தான் அணிந்திருந்த ஹெல்மெட்டை வைத்து அந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படுகிறது. 

இதனைப் பார்த்த அங்கிருந்த சிலர், அந்த இளைஞரை தடுத்து நிறுத்தியுள்ளனர். இந்த தாக்குதலில், அந்த இளம்பெண் சம்பவ இடத்திலேயே கீழே விழுந்து மயக்கமடைந்துள்ளார். சிறிது நேரம் கழித்து, அந்த இளைஞர், இளம்பெண்ணை மீட்டு உடனடியாக மீட்டு இருசக்கர வாகனத்தில் அமரவைத்து உடனடியாக அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். இதனை அங்கிருந்த சிலர் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பொது இடத்தில் இளம்பெண் ஒருவரை கையாலும், ஹெல்மெட்டாலும் கொடூரமாக தாக்கிய இளைஞர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கறிஞர் ஜோசப் என்பவர் ஆன்லைன் மூலம் சென்னை காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அந்த இளைஞர் யார் என்பது குறித்து இருசக்கர வாகன எண்ணை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். பொது இடத்தில் இளம்பெண் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

விடைத்தாளில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ எழுதிய மாணவர்கள்; ஆசிரியர்களின் செயலால் அதிரடி நடவடிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Action by teachers on Students wrote 'Jai Sri Ram' in the answer sheet

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் பகுதியில் வீர் பகதூர் சிங் புர்வன்சால் பல்கலைக்கழகம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பல்கலைக்கழத்தில் பி-பார்ம் பயின்ற முன்னாள் மாணவர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு, அவர்கள் எழுதிய தேர்வில் அவர்களை தேர்ச்சி பெற வைப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. 

இது தொடர்பான புகாரை, பல்கலைக்கழகத்தின் மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், பல்கலைக்கழக துணைவேந்தரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், அவர் அளித்த புகார் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ், முன்னாள் மாணவர்கள் முதலாமாண்டு தேர்வில் எழுதிய விடைத்தாள்களின் நகலை எடுத்து சரி பார்த்துள்ளார். அதில், ஜெய் ஸ்ரீ ராம் என்றும், ஜெய் ஹனுமான் என்றும், கிரிக்கெட் வீரர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மா என்ற வார்த்தைகளை மட்டும் எழுதி விடைத்தாள்களை நிரப்பியுள்ளனர். அந்த விடைத்தாள்களுக்கு 56% மதிப்பெண்களை ஆசிரியர்கள் மூலம் பெற்றுள்ளனர்.

இதில் அதிர்ச்சியடைந்த மாணவர் சங்கத் தலைவர் திவ்யான்ஷு சிங், இந்த விடைத்தாள்களை முறைப்படி மீண்டும் திருத்த சொன்ன போது, அதில் அனைவருக்கும் பூஜ்ஜியம் மதிப்பெண்கள் மட்டுமே கிடைத்துள்ளது. இதனையடுத்து, விடைத்தாள்களின் நகலையும், முறைப்படி திருத்தப்பட்ட விடைத்தாள்களையும் எடுத்து பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கு அனுப்பி இது குறித்து முழுமையான விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

அதன் அடிப்படையில், இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டதில், இந்த முறைகேட்டில் 2 ஆசிரியர்களுக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது. அதன் பேரில், மாணவர்களிடம் பணத்தைப் பெற்று கொண்டு அவர்களை தேர்ச்சி பெற வைத்த அந்த 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டது. மேலும், இந்த விவகாரம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜெய் ஸ்ரீ ராம், ஜெய் ஹனுமான், கிரிக்கெட் வீரர்கள் பெயரை மட்டுமே எழுதி வைத்த மாணவர்களை தேர்ச்சி பெற வைத்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.