சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள இமாச்சலப்பிரதேசத்தில் பா.ஜ.க.வும், குஜராத் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியும் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளன.
இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை ஆளும் பா.ஜ.க. வெளியிட்டுள்ளது. அதில், 8 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும். குடும்பங்களுக்கு ஆண்டுதோறும் மூன்று இலவச சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். அரசு வேளைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கப்படும். பள்ளி மாணவிகளுக்கு இலவச சைக்கிள், கல்லூரி மாணவிகளுக்கு ஸ்கூட்டர் வழங்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகள் இடம் பெற்றுள்ளன.
11 அம்சங்களைக் கொண்ட இந்த அறிக்கையில், பொது சிவில் சட்டத்தை அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் நவம்பர் 12 ஆம் தேதி அன்று நடைபெறவுள்ள வாக்குப்பதிவில் பா.ஜ.க., காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.
குஜராத் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக டிசம்பர் 1 ஆம் தேதி மற்றும் டிசம்பர் 5 ஆம் தேதி நடைபெறும் நிலையில், எட்டு முக்கிய அம்சங்கள் அடங்கிய வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதில், 500 ரூபாய்க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வழங்கப்படும். 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கப்படும். அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் போன்ற வாக்குறுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்த தேர்தல் வாக்குறுதிகளை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் ஆளும் பா.ஜ.க., எதிர்க்கட்சியான காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகளிடையே மும்முனைப் போட்டி நிலவுகிறது.