மணிப்பூரில் கடந்த மே மாதம் 4 ஆம் தேதி குக்கி பழங்குடியின பெண்கள் இருவரை மைத்தேயி இன இளைஞர் கும்பல் ஒன்று ஆடைகளைக் களைந்து இழுத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், அதிர்வலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும், நாட்டையே உலுக்கியுள்ள இச்சம்பவம் நடந்து 77 நாட்கள் ஆன பிறகே வெளி உலகிற்குத் தெரியவந்துள்ளது. இந்தக் கொடூர சம்பவத்திற்கு அரசியல் கட்சியினர், மனித உரிமை ஆர்வலர்கள் எனப் பலரும் தங்களது கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. இதில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். அதனால், நாடாளுமன்ற இரு அவைகளும் முதல் நாளே முடங்கியது. இது குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாகூர், “துரதிர்ஷ்டவசமாக மணிப்பூர் விவகாரத்தை அரசியல் கண்ணாடி மூலம் எதிர்க்கட்சிகள் பார்க்கின்றனர். அத்துடன் இதனையும் அரசியலாக்க முயற்சி செய்து வருகின்றனர். மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நாங்கள் தயார் என்று கூறிவிட்டோம், ஆனால் அதனைப் பற்றி விவாதிக்காமல் ஓட்டம் எடுக்கின்றனர். ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்கின்றன. ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி மற்றும் எதிர்க்கட்சிகள் மௌனமாக இருக்கின்றனர். ஒரே ஒரு மாநிலம் மணிப்பூருக்காக மட்டும் கண்ணீர் வடிக்கின்றனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்களில் நீங்கள் எப்படி மாநிலங்களுக்கு இடையே பாகுபாடு காட்ட முடியும்? பெண்களை ஆயுதமாக மட்டுமே நீங்கள் பார்க்கிறீர்கள். மணிப்பூர் விவகாரத்தை விவாதிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் விவாதிக்காமல் ஏன் ஓடுகிறீர்கள்? ராஜஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகளுக்குச் சோனியா காந்தி, ராகுல் காந்தி பதில் அளிக்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.