டெல்லியில் மத்திய போதைப் பொருள் தடுப்பு காவல்துறை மற்றும் டெல்லி சிறப்பு காவல்துறை சார்பில் நடைபெற்ற சோதனையில் கடந்த பிப்ரவரி மாதம் 24 ஆம் தேதி 50 கிலோ ரசாயன வகை போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில், கடந்த 3 ஆண்டுகளில் 3 ஆயிரத்து 500 கிலோ போதைப் பொருள்கள் கடத்தப்பட்டுள்ளதாகவும், இதன் மொத்த மதிப்பு ரூ. 2 ஆயிரம் கோடி எனவும் தெரிய வந்தது.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டது திரைப்படத் தயாரிப்பாளர் ஜாஃபர் சாதிக் தான் என்பது தெரியவந்தது. அதே சமயம் கடத்தல் கும்பலுக்கு தலைவனாக ஜாஃபர் சாதிக் செயல்பட்டதும் உறுதியானது. இந்த வழக்கு விசாரணை தொடர்பாக ஜாபர் சாதிக் தேடப்பட்டு வந்த நிலையில், போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் ஜெய்ப்பூரில் கடந்த மார்ச் மாதம் 9 ஆம் தேதி (09.03.2024) கைது செய்யப்பட்டு மத்திய போதைப் பொருள் தடுப்பு போலீசாரின் காவலில் இருந்து வருகிறார். இதற்கிடையே சென்னை சாந்தோமில் உள்ள ஜாபர் சாதிக் வீட்டிற்கு மத்திய போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் சார்பில் சீல் வைக்கப்பட்டது.
இதனையடுத்து ஜாபர் சாதிக்கின் சீல் வைத்த வீட்டை பயன்படுத்த அனுமதிக்க கோரி ஜாபர் சாதிக் வழக்கறிஞர் டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கு இன்று (05.04.2024) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, “ஜாபர் சாதிக்கின் வீட்டிற்கு சீல் வைத்தது ஏன்?” என மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி எழுப்பியது. அதற்கு, “சீல் வைத்த வீட்டை பயன்படுத்துவதில் எவ்வித ஆட்சேபனையும் இல்லை” என என்.சி.பி. தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதனைப் பதிவு செய்துகொண்ட நீதிமன்றம் ஜாபர் சாதிக் வழக்கறிஞர் தொடர்ந்த மனுவை முடித்து வைத்து பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து விரைவில் வீட்டின் சீல் அகற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.