Skip to main content

“பாலியல் குற்றவாளிகளுக்கு அரசு வேலை இல்லை”- முதல்வர் அதிரடி

Published on 09/08/2023 | Edited on 09/08/2023

 

Those who misbehave with women will not get government jobs say CM ashok gehlot

 

பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடுபவர்களை அரசு வேலைகளில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படும் என்று ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் அதிரடியாக அறிவித்துள்ளார்.

 

ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது.  இதில் பில்வாரா மாவட்டத்தில் சில தினங்களுக்கு முன் 4 வயது சிறுமி  கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு செங்கல் சூளையில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் ராஜஸ்தான் மாநிலம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. மேலும் இந்த வழக்கில் 7 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வழக்கு விசாரணை விரைவாக நடத்தப்பட்டு குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் என்று மாநில அரசு உறுதி அளித்துள்ளது.

 

இந்த நிலையில், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இல்லத்தில் நேற்று இரவு சட்டம் ஒழுங்கு தொடர்பாக மறு ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முதல்வர், “பில்வாரா மாவட்டத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் காவல்துறை கடுமையான மற்றும் விரைவான நடவடிக்கை எடுத்து வருகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குக் கடுமையான தண்டனையை உறுதி செய்யப்படும். பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினருக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதே எங்களது முதன்மையான பணி ஆகும்.

 

சிறுமிகள் மற்றும் பெண்களைத் துஷ்பிரயோகம் செய்தல், பாலியல் வன்கொடுமை முயற்சிகள் மற்றும் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகளுக்கு அரசு வேலைகளில் இருந்து தடை விதிக்கப்படும் என்று மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த குற்றவாளிகளின் பதிவு மற்றும் வரலாற்றுத் தாள்கள் போன்றவை காவல் நிலையங்களில் வைத்துப் பராமரிக்கப்படும். மேலும், அது அரசு வேலைகளுக்குத் தேவையான நற்சான்றிதழிலும் இடம் பெறும். இதுபோன்ற வழக்குகளுடன் அவர்கள் அரசு வேலைக்கு விண்ணப்பித்தால், அத்தகைய நபர்களின் தகவல்கள் சரிபார்க்கப்பட்டு, அவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். அத்தகைய குற்றவாளிகளுக்கு எதிராகச் சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இது போன்ற சமூக விரோத சக்திகளை சமூகம் புறக்கணிப்பது மிகவும் அவசியம்” என்று உத்தரவிட்டுள்ளார்.

 

 

சார்ந்த செய்திகள்