இந்தியாவில் தமிழ்நாடு, டெல்லி, கேரளா, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, குஜராத், மஹாராஷ்ட்ரா, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால், அந்தந்த மாநில, யூனியன் பிரதேச அரசுகள் கரோனா தடுப்பு பணிகள் மற்றும் கரோனா தடுப்பூசி போடும் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. மேலும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சகமும் மத்திய உள்துறை அமைச்சகமும் அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன் தலைமையில், இன்று (17/04/2021) மாலை தமிழகம் உட்பட 11 மாநிலம், யூனியன் பிரதேசங்களில் மேற்கொள்ளப்படும் கரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் காணொளி மூலம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ்வர்தன், "நாட்டில் கரோனா பாதிப்பு 7.6 சதவீதம் ஆகவும், உயிரிழப்பு 10.2 சதவீதம் ஆகவும் அதிகரித்துள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து குணமடைவோரைவிட புதிதாக பாதிக்கப்படுவோர் அதிகமாக உள்ளனர். மாநிலங்களிடம் 1.58 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. அடுத்த வாரம் மேலும் 1.16 கோடி டோஸ் கரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்குத் தரப்பட உள்ளன" எனத் தெரிவித்தார்.