மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், 288 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட அம்மாநிலத்தில் பாஜகவும், சிவசேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. இந்த இருகட்சிகளுடனும் வேறு சில சிறு கட்சிகளும் இணைந்து தேர்தலை எதிர்கொள்கின்றன.
நீண்ட நாட்களாக தொகுதி பங்கீட்டில் இழுபறி நீடித்துவந்த நிலையில், சிவசேனாவுக்கு 124 தொகுதிகளும், பாஜகவுக்கு 144 தொகுதிகளும் என சமீபத்தில் தொகுதி பங்கீடு முடிக்கப்பட்டது. மீதமுள்ள இடங்கள், கூட்டணியில் உள்ள சிறிய கட்சிகளுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவின்படி கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலேயின் இந்திய குடியரசு கட்சிக்கு பாஜக 6 தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இதற்கான வேட்பாளர் பட்டியலை ராம்தாஸ் அத்வாலே வெளியிட்டுள்ளார்.
இதில் நிழல் உலக தாதாவான சோட்டா ராஜனின் சகோதரர் தீபக் நிகல்ஜே வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பால்தான் சட்டப்பேரவைத் தொகுதியில் இந்திய குடியரசு கட்சி சார்பில் இவர் போட்டியிடுகிறார். பாஜக கூட்டணியில் நிழல் உலக தாதா ஒருவரின் சகோதரருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து அத்வாலே கூறுகையில் ‘‘சோட்டா ராஜனின் சகோதரர் நீண்டகாலமாகவே எங்கள் கட்சியில் உறுப்பினராக உள்ளார். அதனால் தான் அவருக்கு சீட் வழங்கியுள்ளோம்’’ எனக் கூறினார்.