வீட்டைவிட்டு வெளியேறிய காதல் ஜோடிக்கு ஒரு காவல்நிலையமே முழுமையாக ஒத்துழைத்து திருமணம் நடத்திவைத்துள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ளது பாரபங்கி. இங்குள்ள காலனி பகுதியில் வசித்து வரும் வினய்குமார், தன் பக்கத்து வீட்டுப் பெண்ணான நேஹா வெர்மாவுடன் காதலித்து வந்துள்ளார். இவர்களது காதலை இருவீட்டாரும் எதிர்த்த நிலையில், அவர்கள் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அவர்கள் இருவரையும் காணவில்லை என முகமதுபூர் காலா பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் புகாரளிக்கப்பட்ட நிலையில், மீட்கப்பட்டு அழைத்துவரப்பட்டனர்.
Barabanki: Police arranged wedding of a couple at Mohammadpur Khala Police Station premises. (25.03.2018) pic.twitter.com/VbhAz97If0
— ANI UP (@ANINewsUP) March 25, 2018
பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில், அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளும் வயதை எட்டியவர்கள் என்பதை அறிந்த காவல்துறையினர் இருவீட்டாரையும் சமாதானம் செய்துள்ளனர். பின்னர், காவல்நிலையத்தின் ஒரு அறையை மலர்கள், தோரணங்கள் கொண்டு அலங்கரித்து திருமண விழா நடைபெற்றுள்ளது. வடஇந்தியாவின் பாரம்பரியமான மணமகனை குதிரையில் வைத்து அழைத்து வரும் நிகழ்ச்சியையும் நடத்தி காவல்துறையினர் அசத்தியுள்ளனர்.
பொதுவாக இதுமாதிரியான விவகாரங்களில் சம்மந்தப்பட்டவர்களுக்கு திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகளை காவல்துறையினர் ஏற்படுத்தித் தந்ததாக செய்திகள் கேள்விப்பட்டிருக்கலாம். ஆனால், ஒரு காவல்நிலையமே திருமண மண்டபமாக மாற்றப்பட்டு, காவல்துறையினர் தலைமையில் ஒரு திருமணம் நடைபெற்றது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.