கேரளாவில் ஏற்கனவே 'நிபா' வைரஸ் உள்ளிட்ட பல்வேறு வைரஸ் பாதிப்புகளால் அண்மையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் கேரள மாநிலம் தலைநகர் திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு புதிய வைரஸ் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக வெளியாகியிருக்கின்ற தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
'புருசெல்லோசிஸ்' எனப்படும் விலங்குகள் மூலம் பரவும் நோய் தாக்குதல் ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தந்தை, மகன் உள்ளிட்ட இருவர் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனை கல்லூரியில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாகவும் இந்த வைரஸ் ஆடு, மாடு, பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. வைரஸ் பாதிப்பு ஏற்படுபவருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் பலவீனம் உள்ளிட்டவை ஆரம்பகால அறிகுறி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதல் தீவிரமடைந்தால் நரம்பு மண்டலம் மற்றும் இதயத்தில் பாதிப்பு ஏற்படக் கூடும் எனவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
தற்பொழுது இந்த வைரஸ் தாக்குதலால் சிகிச்சை பெற்று வரும் தந்தை மகனுக்கு பெரிய பாதிப்புகள் இல்லை என்றாலும் பொதுமக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூலை மாதம் கொல்லம் மாவட்டம் கடக்கல் என்ற பகுதியில் முதன் முதலாக இந்த வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது திருவனந்தபுரத்தில் இருவருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.