மணிப்பூர் மாநிலத்தில் பா.ஜ.க. பெரும்பான்மையை இழந்த நிலையில், அம்மாநில சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளது.
60 உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டமன்றத்திற்குக் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை எந்தக் கட்சியும் பெறாத சூழலில், 21 இடங்களில் வெற்றிபெற்ற பா.ஜ.க. சிறுகட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் உதவியோடு ஆட்சியமைத்தது. இந்நிலையில், பா.ஜ.க.-வுக்கு ஆதரவளித்து வந்த தேசிய மக்கள் கட்சி, திரிணாமூல் காங்கிரஸ், சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மூன்று பா.ஜ.க. சட்டமன்ற உறுப்பினர்கள் பா.ஜ.க.-வுக்கு வழங்கிவந்த ஆதரவைத் திடீரென வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து, சட்டசபையில் பா.ஜ.க. தனது பெரும்பான்மையை இழந்துள்ளது. இந்தச் சூழலில், அம்மாநில சட்டமன்றத்தில் தனிப்பெரும் கட்சியாக உள்ள காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமைகோரியுள்ளது. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மணிப்பூரின் முன்னாள் முதல்வர் இபோபி சிங், ஆளுநரை நேரில் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியதோடு, விரைவில் சட்டப்பேரவையைக் கூட்டி, நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவும் வலியுறுத்தி உள்ளார்.