Published on 18/09/2021 | Edited on 18/09/2021
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இணையமைச்சராக இருந்தவர் பாபுல் சுப்ரியோ. கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற மத்திய அமைச்சரவை விரிவாக்கத்தின்போது இணையமைச்சர் பதவியை இழந்த இவர், அரசியலைவிட்டு விலகுவதாக அறிவித்தார்.
இருப்பினும் அதன்பின்னர் பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவை சந்தித்த பாபுல் சுப்ரியோ, தனது முடிவை மாற்றிக்கொண்டு எம்.பி.யாக தொடரப்போவதாக அறிவித்தார். இந்தநிலையில் இன்று (18.09.2021) அவர் பாஜகவில் இருந்து விலகி திரிணாமூல் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.
மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு இதுவரை நான்கு பாஜக எம்.எல்.ஏ.க்கள் திரிணாமூல் காங்கிரஸில் இணைந்த நிலையில், தற்போது பாஜக எம்.பி. ஒருவர் திரிணாமூலில் இணைந்திருப்பது மேற்கு வங்கத்தில் பாஜகவிற்கு ஏற்பட்ட பின்னடைவாகவே கருதப்படுகிறது.