கடந்த 2016ஆம் ஆண்டில் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று பதவியில் இருந்த டொனால்ட் டிரம்ப், 2020ஆம் ஆண்டில் நடந்த தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வியடைந்தார். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் இந்த அதிபர் தேர்தலில், மீண்டும் களமிறங்கிய டொனால்ட் டிரம்ப் பெரும்பான்மைக்கு தேவையான அதிக இடங்களில் பிடித்து அபார வெற்றி பெற்றுள்ளார். கடந்த 1885ஆம் ஆண்டு முதல் 1889ஆம் ஆண்டு வரை மற்றும் 1893ஆம் ஆண்டு முதல் 1897ஆம் ஆண்டு வரை அமெரிக்க அதிபராக பதவி வகித்த க்ரோவர் க்ளீவ்லேண்டிற்குப் பிறகு, தொடர்ச்சியாக பதவி வகிக்கும் இரண்டாவது அதிபராக டிரம்ப் பதவியேற்கவுள்ளார். அதே போல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் 34 குற்றச் செயல்களுக்குத் தண்டனை விதிக்கப்பட்ட டிரம்ப், சட்டப்பூர்வ குற்றச்சாட்டை எதிர்கொண்டு பதவியில் இருக்கும் முதல் அமெரிக்க அதிபராகவும் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அமெரிக்க அதிபராக பதவியேற்க உள்ள டிரம்பிற்கு சர்வதேச அளவில் பலரும் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். அதன்படி பிரதமர் மோடி எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “உங்கள் தேர்தல் வரலாற்று வெற்றிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே. உங்கள் முந்தைய ஆட்சியின் வெற்றிகளை நீங்கள் கட்டியெழுப்பும்போது, இந்தியா - அமெரிக்கா இடையே விரிவான உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்த எங்களின் ஒத்துழைப்பை புதுப்பிப்பதற்கு நான் எதிர்நோக்குகிறேன். நமது மக்களின் முன்னேற்றத்திற்காகவும், உலகளாவிய அமைதி மற்றும் செழிப்பு ஆகியவற்றை மேம்படுத்தவும் பாடுபடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மக்களவையின் எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி எம்.பி. எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக வெற்றி பெற்றதற்கும், உங்கள் வெற்றிக்கும் வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார். அதோடு கமலா ஹாரிஸுக்கும் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், ‘கமலா ஹாரிஸின் எதிர்கால முயற்சிகளுக்கு நல்வாழ்த்துக்கள்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.