Skip to main content

ஜம்மு காஷ்மீர் எப்போது பாகிஸ்தானின் அங்கமானது? - ஃபரூக் அப்துல்லா பேச்சு! 

Published on 14/10/2021 | Edited on 14/10/2021

 

farooq abdullah

 

ஜம்மு காஷ்மீரில் இரண்டு ஆசிரியர்கள், மருந்துக்கடை உரிமையாளர், தெருவோர உணவுக்கடை உரிமையாளர் உள்ளிட்ட ஏழு பேர் தீவிரவாதிகளால் கொல்லப்பட்டனர். இந்தநிலையில், தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட பள்ளி முதல்வர் ஒருவரின் இரங்கல் கூட்டம் நடைபெற்றது.

 

இதில் கலந்துகொண்டு பேசிய ஜம்மு காஷ்மீரின் மூத்த அரசியல் தலைவரும், முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீர் ஒருபோதும் பாகிஸ்தானுக்கு சொந்தமாக மாறாது என தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக அவர், "நாம் இந்த மிருகங்களை (தீவிரவாதிகளை) எதிர்த்துப் போராட வேண்டும். இந்த இடம் ஒருபோதும் பாகிஸ்தானாக மாறாது. எந்த சூழ்நிலையிலும் நாம் இந்தியாவின் ஒரு பகுதியாக இருப்போம். கொலையாளிகள் என்னை சுட்டுக்கொன்றாலும் சரி, ஜம்மு காஷ்மீர் பாகிஸ்தானின் அங்கம் ஆகாது" என தெரிவித்தார்.

 

மேலும் ஜம்மு காஷ்மீரிலிருந்து மக்கள் வெளியேறியபோது, சீக்கியர்கள் அங்கேயே இருந்ததை நினைவுபடுத்திய ஃபரூக் அப்துல்லா, "நாம் இங்கேயே வாழ்ந்து இங்கேயே இறக்க வேண்டும். நான் அதற்காக பெருமைப்படுகிறேன். அந்த நேரத்தில் நீங்கள் எனக்கு நம்பிக்கையை அளித்தீர்கள்" என கூறினார்.

 

தொடர்ந்து அவர், "ஒரு ஆசிரியர் நம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்து அவர்களுக்கு வழிகாட்டுவார். அவரைக் கொன்றுவிட்டு இஸ்லாமிற்கு சேவை செய்வதாக நினைத்தால், கண்டிப்பாக இல்லை. அது சாத்தானுக்கு செய்யும் சேவை. சாத்தான் நரகத்திற்குச் செல்லும். அதற்கு சேவை செய்பவர்களும் நரகத்திற்குச் செல்வார்கள். நாடு முழுவதும் எரிந்து கொண்டுள்ளது. நம்மைப் பிரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இதைச் செய்பவர்கள் வெற்றிபெற மாட்டார்கள். சில காலம் நமக்குப் பின்னடைவு ஏற்படும். ஆனால் கடவுள் அவர்களை வெற்றிபெற அனுமதிக்க மாட்டார். நம்மைப் பிரிக்க முயல்பவர்கள் இப்போதைக்கு சில நன்மைகளைப் பெறுவார்கள், ஆனால் இறுதியில் அழிந்து போவார்கள்" என தெரிவித்தார்.

 

அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "நாம் அஞ்சாமல் வாழ வேண்டும். தீவிரவாதிகள் ஒருபோதும் வெற்றிபெற மாட்டார்கள். அவர்கள் என்ன நினைத்தாலும் அவர்கள் தோல்வியடைவார்கள். ஆனால் முஸ்லிம்கள், சீக்கியர்கள், இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் நாம் அனைவரும் வலுவாக நிற்க வேண்டும். இந்தியாவில் முஸ்லிம்கள், இந்துக்கள் மற்றும் சீக்கியர்களைப் பிரிக்கும் ஒரு வகுப்புவாத புயல் உருவாகிவருகிறது. இந்தப் பிரிவினை அரசியலை நிறுத்த வேண்டும். அது நிறுத்தப்படாவிட்டால் இந்தியன் பிழைக்கமாட்டான். இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும் என்றால் நாம் ஒன்றாக வாழ வேண்டும், அப்போதுதான் இந்தியா முன்னேறும்" என தெரிவித்தார்.

 

 

சார்ந்த செய்திகள்