கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான அரசுக்கு சட்டப்பேரவையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.
அண்மையில் நடந்த கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை. இதையடுத்து, காங்கிரஸ் மற்றும் மஜத கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்க திட்டமிட்டனர். ஆனால் தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை சேர்ந்த எடியூரப்பாவை முதலமைச்சராக பதிவியேற்க அளுநர் அழைப்பு விடுத்தார். இதைத்தொடர்ந்து பெரும்பான்மையை நிரூபிக்க முடியாத காரணத்தினால் எடியூரப்பா பதவி விலகினார்.
இதையடுத்து, மஜத தலைவர் குமாரசாமி முதல்வராக பதவியேற்றார். அவருடன் துணை முதல் மந்திரியாக தேர்வு செய்யப்பட்ட கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வராவும் பதவியேற்றார்.
இவர்கள் இருவரை தவிர மேலும் 32 பேர் மந்திரிகளாக பதவியேற்க உள்ளனர். இதில் காங்கிரசுக்கு 22 மந்திரி பதவிகளும், மஜதவுக்கு 12 மந்திரி பதவிகளும் அடக்கம். சபாநாயகராக காங்கிரஸ் எம்.எல்.ஏ ரமேஷ்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதையடுத்து பேரவையில் இன்று குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பு கோருகிறார். சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு முடிவடைந்ததும் சட்டசபையில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.