ஜார்க்கண்டில் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் செயல் தலைவர் ஹேமந்த் சோரன் பதவி வகித்து வந்தார். இந்தச் சூழலில் இவர் சுரங்க முறைகேட்டுடன் தொடர்புடைய பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறி, ஹேமந்த் சோரன் மீதான சட்டவிரோதப் பணப்பரிமாற்ற வழக்கை அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி 31 ஆம் தேதி (31.01.2024) விசாரணை மேற்கொண்டனர்.
இதனையடுத்து ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஹேமந்த் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் ஹேமந்த் சோரனை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதனைத் தொடர்ந்து, அம்மாநில போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த சம்பாய் சோரன் அம்மாநில முதல்வராக பதவியேற்றார்.
அதன் பின்னர், அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் கடந்த ஜூன் 28ஆம் தேதி ஜாமீனில் வெளியே வந்தார். அதனையடுத்து, சம்பாய் சோரன் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததால் மீண்டும் ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்றார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் பேரவையில் ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று (08-07-24) நடந்தது.
81 உறுப்பினர்கள் கொண்ட ஜார்க்கண்ட் பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 39 எம்.எல்.ஏக்கள் ஆதரவு தேவை. ஆளும் கூட்டணி கட்சியான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 27 எம்.எல்.ஏக்கள், காங்கிரஸ் 17 எம்.எல்.ஏக்கள், ராஷ்ட்ரிய ஜனதா தளம் 1 எம்.எல்.ஏக்கள் ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அதே போல், பா.ஜ.கவின் 25 எம்.எல்.ஏக்கள் உள்பட எதிர்கட்சியில் 27 எம்.எல்.ஏக்கள், 3 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளனர். 81 உறுப்பினர்களை கொண்ட சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் 45 எம்.எல்.ஏக்கள் ஆதரவுடன் ஹேமந்த் சோரன் வெற்றி பெற்றுள்ளார். நம்பிக்கை வாக்கெடுப்பில் வென்ற நிலையில், ஹேமந்த் சோரன் தனது அமைச்சரவையை விரிவுப்படுத்துவார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.