
துணை முதல்வர் கான்வாய் வாகனங்களால் நுழைவுத் தேர்வை தவறவிட்டதாக 20 மாணவர்கள் குற்றச்சாட்டு வைத்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசம் - பவன் கல்யாணின் ஜனசேனா - பா.ஜ.க ஆகிய கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநிலத்தில், ஜன சேனா தலைவரும், நடிகருமான பவன் கல்யாண் துணை முதல்வராக பதவி வகித்து வருகிறார். இந்த சூழ்நிலையில், பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஏற்பட்ட போக்குவரத்து இடையூறு காரணமாக 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஜேஇஇ என்ற நுழைவுத் தேர்வை எழுதத் தவறவிட்டதாகக் குற்றச்சாட்டு வைத்துள்ளனர்.
விசாகப்பட்டினத்தின் பெண்டுர்த்தி பகுதியில் உள்ள அயன் டிஜிட்டல் தேர்வு மையத்தில், ஜெஇஇ நுழைவுத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வு மையத்திற்கு தாமதமாக வந்தததாகக் கூறி 20க்கு மேற்பட்ட மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் ஒன்றாகக் கூடி செய்தியாளர்களிடம் வேதனை தெரிவித்தனர். அதில் ஒரு பெற்றோர் கூறியதாவது, ‘எங்கள் குழந்தைகள் பல மாதங்களாக இந்தத் தேர்வுக்குத் தயாராகி வருகின்றனர். தங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட ஏதோவொன்றால் இதுபோன்ற தோல்வியை சந்திப்பது மனவேதனை அளிக்கிறது’ என்று தெரிவித்தார்.
துணை முதல்வர் பவன் கல்யாணின் கான்வாய் வாகனங்களால் ஜேஇஇ நுழைவுத் தேர்வை தவறவிட்டதாக மாணவர்களின் குற்றச்சாட்டுகள் அம்மாநிலத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த சூழ்நிலையில், விசாகப்பட்டினம் நகர காவல்துறை இதற்கு விளக்கமளித்துள்ளது. அதில் தேர்வு வழிகாட்டுதலின்படி, மாணவர்கள் 7 மணிக்குள் வர வேண்டும். மைய வாயில்கள் காலை 8 மணிக்குள் கண்டிப்பாக மூடப்பட வேண்டும். வாயில் மூடப்பட்ட பிறகே, துணை முதல்வரின் வாகனத் தொடரணி காலை 8:41 மணிக்கு மட்டுமே அந்தப் பகுதியைக் கடந்து சென்றது. எனவே, துணை முதல்வரின் கான்வாய் வாகனங்களுக்கும், மாணவர்கள் தாமதமாக வந்ததற்கும் எந்த தொடர்பும் இல்லை எனத் தெரிவித்தது.
இதற்கிடையே, இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்துமாறு அம்மாநில காவல்துறைக்கு துணை முதல்வர் பவன் கல்யாண் உத்தரவிட்டுள்ளார்.