Skip to main content

'டாஸ்மாக் விவகாரம்'-மனுவை திரும்பப் பெற தமிழக அரசு முடிவு

Published on 08/04/2025 | Edited on 08/04/2025
'Let the High Court decide' - Tamil Nadu government withdraws petition

டாஸ்மாக்  நிறுவனத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையை எதிர்க்கும் வழக்கை உச்சநீதிமன்றத்தில் இருந்து தமிழக அரசு திரும்பப் பெற்றுள்ளது.

சென்னை மற்றும் கரூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இந்த சோதனையின் மூலம் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

அமலாக்கத்துறை விசாரணையை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு  நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், செந்தில்குமார் அடங்கிய அமர்வதற்கு முன்பு விசாரணையில் இருந்த நிலையில் நீதிபதிகள் இருவரும் வழக்கில் இருந்து  திடீரென விலகினர். அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு எஸ்.எம்.சுப்பிரமணியன் மற்றும் ராஜசேகர் அடங்கிய புதிய நீதிபதிகள் தலைமையில் தற்போது விசாரணையில் இருக்கிறது.

கடந்த விசாரணையில், 'டாஸ்மாக் முறைகேடு வழக்கில் சட்டப்பூர்வ  விசாரணையை சீர்குலைக்கும் வகையில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் மனு விசாரணைக்கு உகந்ததல்ல. எனவே இந்த வழக்கை அபராதத்துடன் தள்ளுபடி செய்ய வேண்டும். அமலாக்கத்துறையிடம் முறையிட வாய்ப்பு இருந்தும் நேரடியாக ஐகோர்ட்டை நாடியது தவறு. சோதனையின் போது அதிகாரிகள் உணவு அருந்த, ஓய்வெடுக்க அனுமதி வழங்கிய பிறகே வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டது. பெண் அதிகாரிகள் பாதுகாப்பான முறையில் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்' என அமலாக்கத்துறை தெரிவித்திருந்தது.

அமலாக்கத்துறை தாக்கல் செய்த பதில் மனுவுக்கு பதிலளிக்க தமிழக அரசு அவகாசம் கேட்ட நிலையில்  ஏப்ரல் 8 ஆம் தேதி (இன்று) வழக்கு ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை வேறு அமர்வுக்கு மாற்ற வேண்டுமென மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வரும் நீதிபதிகளில் இரண்டாவது நீதிபதியான ராஜசேகரின் சகோதரர் அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கறிஞராக இருக்கிறார். எனவே இந்த வழக்கை இந்த அமர்வு விசாரிக்கக் கூடாது என்று தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் விஜயன் முறையிட்டிருந்தார். உயர்நீதிமன்றம் இதனை ஏற்க மறுத்தது. இதனால் வேறு மாநில உயர்நீதிமன்றத்திற்கு இந்த வழக்கை மாற்ற வேண்டும் என தமிழக அரசு உச்சநீதிமன்றத்தை நாடியிருந்தது.

இது ஒருபுறம் இருக்க பட்டியல்படி இன்று இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது தமிழக அரசு தரப்பில் சிறிது நேரத்திற்கு விசாரணையை தள்ளி வைக்கும் படி கோரப்பட்டது. அதனை ஏற்று வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் விசாரணைக்கு அழைத்த பொழுது,  மீண்டும் வழக்கை ஒத்திவைக்க வேண்டும் என தமிழக அரசு தரப்பில் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதனைக்  கேட்ட நீதிபதிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர்.

டாஸ்மாக் விவகாரத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கை விசாரணைக்கு எடுக்க விடாமல் உயர்நீதிமன்றத்தை  தமிழக அரசு இழிவுபடுத்துகிறது. இந்த வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்த பொழுது உச்சநீதிமன்றத்திற்கு செல்வதாக கூறியிருந்தால் இன்று இந்த வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டிருக்க மாட்டோம். இந்த வழக்கு பொது நலத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதா அல்லது சில டாஸ்மாக் அதிகாரிகள் நலத்திற்காக தாக்கல் செய்யப்பட்டதா? குறைந்தபட்சம் நீங்கள் நீதிமன்றத்திற்காவது நேர்மையாக இருக்க வேண்டும்' என கண்டனத்தை நீதிபதிகள் பதிவு செய்தனர்.

'Let the High Court decide' - Tamil Nadu government withdraws petition

இதற்கு அரசு தரப்பு வழக்கறிஞர், 'மாநில அரசின் உரிமைக்காக தான் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறோம்' என பதிலளித்தார். அரசு தரப்பு கோரிக்கையை ஏற்று பிற்பகல் 2:15 மணிக்கு வழக்கு விசாரிப்பதாக தெரிவித்த நீதிபதிகள், உச்சநீதிமன்றம் இந்த வழக்கை எடுத்துக் கொண்டாலும் எடுக்கா விட்டாலும் தமிழக அரசு தரப்பில் இந்த வழக்கில் உயர்நீதிமன்றத்தில் வாதங்களை முன் வைக்க வேண்டும்' என உத்தரவிட்டனர்.

டாஸ்மாக் விவகாரத்தில் தாங்கள் (உச்சநீதிமன்றம்) தலையிட அவசியமில்லை, மாநில உயர்நீதிமன்றமே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்ததால், தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத்தில் இருந்து தற்போது திரும்பப் பெற்றுள்ளது.

அதேநேரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் வழக்கை திரும்பப் பெறுவதாக கோரப்பட்டது. அதற்கு நீதிபதிகள் வழக்கை திரும்பப் பெறுவதாக இருந்தால் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர். அதன்பிறகு வழக்கை திரும்பப் பெறுவது குறித்து தமிழக அரசின் முடிவை தெரிவிக்க சிறிது நேரம் கால அவகாசம் வேண்டும் என நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்த நிலையில், நீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. 

சார்ந்த செய்திகள்