உத்தரப்பிரதேச மாநில முதலவர் யோகி ஆதித்யநாத் அலுவலகத்துக்கு வெளியே கடந்த வாரம் செய்தியாளர்களிடம் பேசிய பெண் ஒருவர். நான் யோகி ஆதித்யநாத்தை திருமணம் செய்து கொள்ளும் விருப்பத்தை அவருக்கு அனுப்பியுள்ளதாக கூறினார். இந்த வீடியோ காட்சிகளை டெல்லி நொய்டாவை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா என்பவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனையடுத்து கனோஜியாவிற்கு எதிராக உத்தர பிரதேச லக்னோ காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து டெல்லியில் கைது செய்யப்பட்ட பத்திரிகையாளர் கனோஜியாவின் கைதுக்கு எதிராக அவரது மனைவி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை இன்று விசாரணைக்கு எடுத்த கோடை விடுமுறை கால உச்சநீதிமன்ற நீதிபதிகள் இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரப்பிரதேச அரசின் வழக்கறிஞரிடம் சரமாரியாக கேள்வி எழுப்பினர். உத்தரப்பிரதேச முதல்வர் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதற்காக பத்திரிகையாளரை கைது செய்ததை சரியானதாக கருதுகீற்களா? ஒவ்வொரு நபரும் சுதந்திரமாக கருத்துக்களை தெரிவிக்க உரிமை உள்ளது என நீதிபதிகள் அதிரடியாக தெரிவித்தனர்.
சில நேரங்களில், சில விஷயங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை தான். அதற்காக கைது செய்வீர்களா? அது மட்டுமின்றி ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது சிறையில் அடைப்பது எப்படி சரியாகும். பத்திரிகையாளர் கனோஜியாவை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் எனவும், உத்தரப்பிரதேச அரசுக்கு தனது கண்டனத்தை தெரிவித்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.இதற்கு முன்னதாக பத்திரிகையாளர் கனோஜியாவை விடுவிக்க வலியுறுத்தி பத்திரிகையாளர்கள் டெல்லியில் போராட்டம் நடத்தினர் என்பது குறிப்பிடதக்கது.